65 வயது வரை பணியாற்றலாமா...? பேராசிரியர்களின் ஓய்வு வயது குறித்து தமிழக அரசுக்கு நீதிமன்றம் போட்ட புது உத்தரவு...!
Can work until age of 65 Court issues new order Tamil Nadu government regarding retirement age professors
தமிழக பல்கலைக்கழகங்களில் நிலவும் பேராசிரியர் பற்றாக்குறை மற்றும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் முக்கிய வழக்கு விசாரணைக்கு வந்தது.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழக உயர்கல்வித்துறையில் பல ஆண்டுகளாக சீரான இடைவெளியில் உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், மாநிலம் முழுவதும் உள்ள பல பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் அதிக அளவில் காலியாக இருப்பதால், மாணவர்களின் உயர்கல்வி, ஆராய்ச்சி பணிகள் மற்றும் கல்வித் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியக்குழு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆசிரியர் எண்ணிக்கைகூட பல கல்வி நிறுவனங்களில் பூர்த்தி செய்யப்படவில்லை. தற்போது பணியாற்றி வரும் பல பேராசிரியர்கள் இன்னும் சில ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ளதால், ஆசிரியர் பற்றாக்குறை எதிர்காலத்தில் மேலும் மோசமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த 2007-ம் ஆண்டு பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு அனுப்பிய பரிந்துரையின் அடிப்படையில், பல மாநிலங்கள் பல்கலைக்கழக ஆசிரியர்களின் ஓய்வு வயதை 60-ல் இருந்து 65 ஆக உயர்த்தியுள்ளன.
ஆனால் தமிழ்நாட்டில் இதுவரை ஓய்வு வயதில் மாற்றம் செய்யப்படவில்லை என்றும், தமிழ்நாட்டிலும் பல்கலைக்கழக பேராசிரியர்களின் ஓய்வு வயதை 60-ல் இருந்து 65 ஆக உயர்த்த வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 28-ந் தேதி தமிழக அரசிடம் மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.டி. ஆஷா முன்னிலையில் நடைபெற்றது. மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் தாட்சாயிணி ரெட்டி ஆஜராகி வாதிட்டார்.
அரசு தரப்பில் வக்கீல் கே. சதீஷ் ஆஜராகினார்.இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, மனுதாரர் முன்வைத்த கோரிக்கை பரிசீலனைக்குரியதாக இருப்பதாக கருத்து தெரிவித்தார்.
இதையடுத்து, பல்கலைக்கழக ஆசிரியர்களின் ஓய்வு வயதை 60-ல் இருந்து 65 ஆக உயர்த்தக்கோரும் கோரிக்கையை தமிழ்நாடு அரசு 8 வாரங்களுக்குள் பரிசீலித்து, சட்டப்படி தகுந்த முடிவை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
English Summary
Can work until age of 65 Court issues new order Tamil Nadu government regarding retirement age professors