விசாரிக்கலாம்...ஆனால் கைது செய்யக்கூடாது- விஜய்க்கு ஆதரவாக பேசிய வைகோ!
Can be questioned but should not be arrested Vaiko speaks in support of Vijay
பொதுவாழ்கைக்கு வருபவர்கள் தங்களுக்காக வருகிற கூட்டத்தை ஒழுங்குப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் வேண்டும். விஜய் எச்சரிக்கையுடன் செயல்பட்டிருக்க வேண்டும் என வைகோ கூறினார்.
சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-தமிழக வரலாற்றில் நடைபெறாத கொடுந்துயர் பேரவலம் கரூரில் நடந்து உள்ளது.
பொதுவாழ்கைக்கு வருபவர்கள் தங்களுக்காக வருகிற கூட்டத்தை ஒழுங்குப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் வேண்டும். விஜய் எச்சரிக்கையுடன் செயல்பட்டிருக்க வேண்டும். கரூர் சம்பவத்தில் பொறுப்பு ஏற்க வேண்டியது த.வெ.க.வினர் தான்.
த.வெ.க.வினர் திட்டமிட்டு தமிழக அரசு மீதும் மறைமுகமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதும் குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்.த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜுனா புரட்சி வெடிக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துவிட்டு, பின்னர் அழித்துள்ளார்.
கரூர் சம்பவம் திட்டமிட்ட சதி என்று சொல்வது ஒரு சதவீதம் கூட நம்ப முடியாதது. விஜய் வந்தபோது மூச்சுத்திணறல் காரணமாக பலர் இறந்துள்ளனர். .
கரூர் சம்பவத்தில் தடியடி நடத்தியதாக நான் எந்த தொலைகாட்சியிலும் பார்க்கவில்லை. தி.மு.க. அடுத்து ஆட்சிக்கு வரக்கூடாது என்று வெறிப்பிடித்தவர்கள் குறை சொல்கிறார்கள்.மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை மனிதாபிமான அடிப்படையில் சந்தித்து பொறுப்புடன் சென்றார்.
விஜய் கரூர் செல்லாமல் இருப்பதை நான் குற்றமாக கருதவில்லை. அவர் பதற்றத்தில் சென்று இருக்கலாம்.நடிகர் விஜய் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டும் என்று சொன்னால் காவல்துறை அனுமதிக்கும்.
கரூர் சம்பவத்தில் இருந்து விஜய் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். விஜய்யை விசாரிக்கலாம். கைது செய்யக்கூடாது. அது தேவையில்லாதது. இவ்வாறு அவர் கூறினார்.
English Summary
Can be questioned but should not be arrested Vaiko speaks in support of Vijay