தள்ளிபோகிறதா தவெகவின் மாநாட்டு தேதி? - நடக்கப்போவது என்ன?
bussy anand discuss with police for tvk cnference date change
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்றக் கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். இந்தக் கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடைபெற்றது. தொடர்ந்து 2-வது மாநாட்டை மதுரையில் அடுத்த மாதம் 25-ந் தேதி நடத்த முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்த மாநாட்டிற்கான பூமி பூஜை மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே பாரபத்தி பகுதியில் கடந்த மாதம் 16-ந்தேதி நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் சேர்ந்து மூகூர்த்தகால் நட்டதனை தொடர்ந்து, மாநாட்டிற்கு அனுமதி கோரி மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அர்விந்தை சந்தித்து மனு அளித்தனர்.

இந்த நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் நேற்று மாநாட்டிற்காக நடைபெறும் பணிகளை பார்வையிட்டார். பின்னர், மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அர்விந்தை சந்தித்து, மாநாட்டுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வலியுறுத்தினார்.
அப்போது போலீஸ் தரப்பில், மாநாடு நடைபெறும் தேதி ஆகஸ்டு 25 என முடிவு செய்து இருக்கிறீர்கள். ஆனால், 27-ந்தேதி விநாயகர் சதுர்த்தி வர இருக்கிறது. அதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டி இருப்பதால், மாநாடு நடைபெறும் தேதியை மாற்றி அமைக்க வாய்ப்பு உள்ளதா? என்று கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. அதற்கு புஸ்சி ஆனந்த் தரப்பில், நிர்ணயித்த தேதியில் மாநாடு நடைபெற வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
இதனால் குறிப்பிட்ட தேதியில் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு நடைபெறுமா?அல்லது தேதி மாற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கருதப்படுகிறது.
English Summary
bussy anand discuss with police for tvk cnference date change