பைக் விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின்உடல் உறுப்புகள் தானம்!
Brain dead teenagers organs donated in bike accident
பைக் விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் ஒரு சிறுநீரகம் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தாலுகா,அனைந்தபெருமாள்நாடனூரைச் சேர்ந்த சண்முகராஜ் என்பவருடைய மகன் பிரபாகரன் . 26 வயதான இந்த வாலிபர் கடந்த 27ம்தேதி ஒரு பைக்கில் பின் அமர்ந்து செல்லும்போது எதிர்பாராத விதமாக அந்த பைக்கின் முன் பக்க டயர் வெடித்ததில் நிலைதடுமாறி பின்நோக்கி விழுந்த பிரபாகரனின் தலையில் அடிபட்டு சுயநினைவின்றி போனார்.இதையடுத்து அந்த வாலிபருக்கு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கடந்த 27ம்தேதி திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்பதை உறவினர்களிடம் எடுத்துரைத்தனர். அதனை தொடர்ந்து கடந்த 28ம்தேதி அவருக்கு மூளை செயல்பாடு இருக்கிறதா என்பதை கண்டறிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அந்த அறிக்கை முடிவில் அவருடைய மூளை செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் எடுத்துரைத்தனர்.
இதையடுத்து பிரபாகரனின் குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசித்து அவரது உடல் உறுப்புகளான கல்லீரல், இரு சீறுநீரகம் ஆகியவை மட்டும் தானமாக அளிக்க முன் வந்தனர். அதன் அடிப்படையில் நேற்று அவரது உடல் உறுப்புகளான கல்லீரல், ஒரு சிறுநீரகம் ஆகியவை மதுரையில் உள்ள இரண்டு மருத்துவமனைகளுக்கும், ஒரு சிறுநீரகம் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டது. அதன்பின் உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்ட பின்பு மாலை அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டு, அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
English Summary
Brain dead teenagers organs donated in bike accident