பாஜக தேர்தல் பொறுப்பாளர் வீட்டில் கத்தி தாக்குதல் முயற்சி...! - 5 பேர் கைது
Attempted knife attack home BJP election official 5 people arrested
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த வரதராஜபுரம் ஊராட்சியில் உள்ள பரத்வாஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஓம்சக்தி செல்வமணி (50). இவர் பா.ஜனதா கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளராக செயல்பட்டு வருகிறார்.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற செல்வமணி, இரவு நேரத்தில் தனது வரதராஜபுரம் இல்லத்திற்கு திரும்பினார்.

அப்போது, 6 பேர் கொண்ட கும்பல் திடீரென கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்த முயன்றது. இதில், செல்வமணியின் கையில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டனர்.சமயோசிதமாக செயல்பட்ட செல்வமணி, அவர்களிடமிருந்து தப்பித்து உள்ளே ஓடி வீட்டின் கதவை பூட்டிக் கொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், வீட்டின் கதவை உடைக்க முயன்றும் முடியாமல், வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் இருப்பதை கவனித்த மர்ம நபர்கள், அவற்றையும் உடைத்து சூறையாடிய பின் அங்கிருந்து தப்பிச் சென்றனர். அந்த நேரத்தில் வீட்டிற்குள் செல்வமணியின் மனைவி, மகள், மகன் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து செல்வமணி மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில், சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், யோகேஸ்வரன், சஞ்சய், தினேஷ்குமார் மற்றும் 15 வயது சிறுவன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
இந்த விசாரணையில், எஸ்.ஐ.ஆர். பணிகளுக்காக பூத் ஏஜன்ட்களுக்கு பாஜக மேலிடம் வழங்கிய பணத்தைப் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறே தாக்குதலுக்குக் காரணம் என்றும், பாஜக மாநில துணைத் தலைவர் அமர்நாத் சொல்லித்தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்துள்ளனர்.மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
Attempted knife attack home BJP election official 5 people arrested