கலைஞர் கைவினை திட்டம் : ரூ.50,000 மானியத்துடன் ரூ.3 லட்சம் வரை கடன்!
Artist Craft Scheme Loan up to Rs 3 Lakh with Rs 50000 Grant
தமிழகத்தில் கைவினைக் கலைஞர்களுக்கு ஆதரவளிக்க உருவாக்கப்பட்டுள்ள கலைஞர் கைவினை திட்டத்தை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ளுமாறு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த திட்டம் சமூக நீதி அடிப்படையில், கைவினை கலைஞர்களின் தொழில்முனைவு திறனை உயர்த்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. 25 வகையான கைவினை தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, ரூ.50,000 மானியத்துடன், அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரை கடனுதவியும், தொழில் மேம்பாட்டிற்கான பயிற்சியும் வழங்கப்படும்.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
- கடனுதவி: அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரை கிடைக்கும்.
- மானியம்: கடனில் 25% மானியமாக அதிகபட்சம் ரூ.50,000 வரை வழங்கப்படும்.
- வட்டி மானியம்: 5% வரை வட்டி மானிய வசதி.
- தகுதிகள்: பயனாளிகள் குறைந்தது 35 வயதிற்கும் மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
பயனாளிகள் சேரக்கூடிய தொழில்கள்:
மரவேலை, உலோக வேலை, மண்பாண்டம் தயாரித்தல், கூரை முடைதல், சிகையலங்காரம், நகை தயாரித்தல், பனை ஓலை மற்றும் பிரம்பு வேலைப்பாடு, இசைக்கருவிகள் தயாரித்தல், ஓவியம் வரைதல் உள்ளிட்ட 25 வகை கைவினை தொழில்கள் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்கும் முறை:
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் தலைமையிலான குழு மூலம் பரிசீலிக்கப்படும் மற்றும் வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும்.
ஆண்டுக்கு குறைந்தது 10,000 பேர் பயன்பெறும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழகத்தில் உள்ள கைவினைக் கலைஞர்கள் தொழில் வளர்ச்சிக்கான இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி, தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Artist Craft Scheme Loan up to Rs 3 Lakh with Rs 50000 Grant