கேமராக்கள் முன் தோன்றி விளம்பரம் தேடுவதை விட்டுவிட்டு நடவடிக்கை எடுங்க... டி.டி.வி. தினகரன் கண்டனம்!
AMMK TTV Dhinakaran Condemns Government Administration Over Severe Rain Disruptions in Chennai
சென்னையில் நேற்று இரவு பெய்த தொடர் கனமழையால் குடியிருப்புகளும் சாலைகளும் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இது சென்னை மாநகராட்சி மற்றும் தவெக அரசின் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடுமையாகக் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது எக்ஸ் பக்க பதிவில் விமர்சித்துள்ளார்.
வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே எச்சரித்தும், மழைநீர் தேங்குவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததே சென்னை மாநகரம் ஒருநாள் மழைக்கே தத்தளிக்கும் நிலைக்குத் தள்ளப்படக் காரணம் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
முதலமைச்சருக்கு டி.டி.வி. தினகரன் விடுத்த வலியுறுத்தல்
களப்பணிகளின் அவசியம்: சென்னை மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திற்கும் அமைச்சர்களையும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் கண்காணிப்புப் பணிக்காக நியமிப்பதோடு தன் கடமை முடிந்துவிட்டதாகக் கருதும் முதலமைச்சர் ஜோசப் விஜய், களப்பணிகளே மக்களைக் காக்கும் என்பதை இனியாவது உணர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
போர்க்கால நடவடிக்கை: கேமராக்கள் முன் தோன்றி விளம்பரம் தேடுவதை விட்டுவிட்டு, களப்பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மழைநீர் தேங்கும் பகுதிகளைக் கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை எடுப்பதோடு, அடுத்தடுத்த நாட்களில் எதிர்பார்க்கப்படும் பெருமழையை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் தவெக அரசையும் மாநகராட்சியையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
English Summary
AMMK TTV Dhinakaran Condemns Government Administration Over Severe Rain Disruptions in Chennai