சுற்றுச்சூழல் பாதிப்பு அபாயம்...! திருத்தணியில் கிளிங்கர் அரவை ஆலை அமைப்பதற்கு சீமான் கடும் எதிர்ப்பு...!
Danger environmental damage Seeman strongly opposes construction clinker grinding plant Tiruttani
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே கார்த்திகேயபுரம் பகுதியில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கிளிங்கர் அரவை ஆலை அமைக்கும் திட்டத்தைத் தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். மக்களின் வாழ்வாதாரத்தையும் இயற்கை வளங்களையும் பாதிக்கும் இத்திட்டத்தை அரசு கைவிடாவிட்டால், மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது,"திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், கார்த்திகேயபுரம் ஊராட்சியில் சுமார் ரூ.838 கோடி முதலீட்டில், ஆண்டுக்கு 35 லட்சம் டன் சிமெண்டு உற்பத்தி செய்யும் திறன் கொண்ட கிளிங்கர் அரவை ஆலை அமைக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் அப்பகுதியின் சுற்றுச்சூழல் சீரழியும் அபாயம் இருப்பதால், இத்திட்டம் கடும் கண்டனத்துக்குரியது.மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதிகளில் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய தொழிற்சாலைகளை அமைப்பதற்கு முன்பாக, அப்பகுதி மக்களின் நலன் குறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக, நீர்வளம், விவசாயம், இயற்கைச் சூழல் மற்றும் எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்வாதாரம் ஆகியவற்றில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் முறையாக மதிப்பிடப்பட வேண்டும்.
மேலும், அப்பகுதி மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்து, அவர்களின் எதிர்ப்புகளுக்கும் கோரிக்கைகளுக்கும் உரிய மதிப்பளிப்பது இன்றியமையாததாகும்.கிளிங்கர் அரவை ஆலையில் கிளிங்கர் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்ற காரணத்தைக் கூறி, அதனால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகளைப் புறக்கணித்துவிட முடியாது. மூலப்பொருட்களைக் கையாளுதல், சிமெண்டு அரவை, காற்றில் பரவும் தூசு, கனரக வாகனங்களின் போக்குவரத்து, ஒலி மாசு மற்றும் நீர்வளப் பயன்பாடு உள்ளிட்ட காரணிகள் சுற்றுச்சூழலைப் பாதிக்கக்கூடும்.
தொழில் வளர்ச்சி என்ற பெயரில் மக்களின் வாழ்விடங்களையும் இயற்கை வளங்களையும் பாதிப்புக்கு உள்ளாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. வளர்ச்சித் திட்டங்கள் மக்களின் நலனையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் அமைய வேண்டும்.மக்களின் கருத்துகளையும் எதிர்ப்புகளையும் மதிக்காமல் திட்டங்களைத் திணிப்பது மக்களாட்சி நெறிமுறைகளுக்கு முரணானது. ஆட்சியாளர்கள் மக்களின் வாழ்வுரிமையைவிடத் தனியார் நிறுவனங்களின் லாப நோக்கத்துக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது.
இயற்கையைப் பாதுகாப்பதும், மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதும் அரசின் முதன்மையான கடமைகளாகும்.சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரிப்பது மக்களின் பொறுப்பாக இருப்பதைப் போலவே, இயற்கை வளங்களைப் பாதுகாத்து, மக்கள் நலனுக்கு எதிரான பாதிப்புகளைத் தடுப்பதும் அரசின் கடமையாகும். எனவே, சுற்றுச்சூழலைச் சீரழிக்கும் அபாயம் கொண்ட திட்டங்களுக்கு அரசு அனுமதி வழங்கக் கூடாது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே கார்த்திகேயபுரம் ஊராட்சியில் கிளிங்கர் அரவை ஆலை அமைக்கும் திட்டத்தைத் தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து, அவர்களின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் வகையில் அரசு செயல்பட வேண்டும்.இக்கோரிக்கையை ஏற்று திட்டத்தைக் கைவிடாவிட்டால், நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று சீமான் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
English Summary
Danger environmental damage Seeman strongly opposes construction clinker grinding plant Tiruttani