தீடிரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு! அவசர அவசரமாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நிறுத்தம்
Air India Express flight grounded due to sudden technical glitch
திருச்சி: திருச்சியில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சார்ஜாவிற்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று அதிகாலை தொழில்நுட்ப கோளாறினால் ஓடுதளத்தில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.
இன்று அதிகாலை 4.45 மணிக்கு, திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சார்ஜாவிற்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், புறப்படும் தருணத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து விமானிகள் எச்சரிக்கையாக செயல்பட்டு, விமானத்தை ஓடுதளத்திலேயே நிறுத்தினர்.
அந்த விமானத்தில் மொத்தம் 180 பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனர். பெரும்பாலானவர்கள் வேலைக்காகவும், சிலர் குடும்பத்துடன் சுற்றுலா நோக்கத்திற்காகவும் சார்ஜா புறப்பட இருந்ததாகத் தெரியவந்துள்ளது. விமானம் புறப்படாமல் ஓடுதளத்தில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் குழப்பத்திலும், அவதியிலும் சிக்கினர்.
விமானத்தில் ஏற்பட்ட கோளாறு தொடர்பாக, தொழில்நுட்ப வல்லுநர்கள் உடனடியாக பரிசோதனை மேற்கொண்டனர். விமானத்தை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், பழுது நீக்கப்பட்ட பின் விமானம் மீண்டும் புறப்படுமா அல்லது மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படுமா என்பதில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள், “நாங்கள் வேலைக்காக அவசரமாக புறப்பட வேண்டும். விமானம் தாமதமாகியதால் பெரிய சிரமம் ஏற்பட்டுள்ளது” எனக் கூறி அதிருப்தி தெரிவித்தனர்.
English Summary
Air India Express flight grounded due to sudden technical glitch