வீட்டில் தனியாக இருந்த சிறுமிடம் பக்கத்து வீட்டுக்காரர் பாலியல் சீண்டல்; அதிர்ச்சியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகம்..!
A young girl commits suicide after being sexually molested by a neighbor while she was alone at home
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி எடப்பாடி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த பக்கத்து வீட்டுக்காரர் 32 வயதான சதீஷ். தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
சம்பவத்தன்று மாணவியின் பெற்றோர் கூலி வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் சதீஷ் பாலியல் சீண்டிலில் ஈடுபட்டுள்ளார். அப்போது மாணவியின் பெரியப்பா அங்கு வந்து, சிறுமிக்கு நேர்ந்த அவலத்தைப் பார்த்து அதிர்ந்து போயுள்ளார். இதனால் சதீஷைப் பிடித்து அவர் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வர அவர்களும் சேர்ந்துக் கொண்டு, சதீஷை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சிக்குள்ளான சிறுமி, வீட்டிற்குள் சென்று, மின் விசிறியில் தாயின் சேலையால் தூக்கிட்டுள்ளார்.
இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போனதுடன், உடனடியாக மாணவியை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இந்த தற்கொலை சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேவூர் போலீசார், பாலியல் தொல்லை கொடுத்து தாக்குதலுக்கு ஆளான சதீஷை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் படுகாயமடைந்திருந்ததால் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், சிறுமியிடம் அத்துமீறியதால் சதீஷை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து, அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று சிறுமியின் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
A young girl commits suicide after being sexually molested by a neighbor while she was alone at home