அதிகாலையிலேயே நடந்த சோகம்! இரவு வெளுத்து வாங்கிய மழை!தேங்கிய நீரில் காலை வைத்த தூய்மைப் பணியாளர் துடிதுடித்து பலி!
A tragedy that happened early in the morning The rain that had been pouring down overnight A sanitation worker who had put his foot in the stagnant water died of convulsions
சென்னை கடந்த இரண்டு நாட்களாக வித்தியாசமான வானிலை அனுபவித்து வருகிறது. பகல் நேரங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்தாலும், இரவு அல்லது அதிகாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலைமையால் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கி, வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
நேற்று இரவு முதல் தொடர்ந்து பெய்த மழையால் பெரும்பாலான சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக அடையாறு, திருவான்மியூரில் இருந்து பெருங்குடி செல்லும் சாலையில் தண்ணீர் தேங்கியதால், மேடு பள்ளம் தெரியாமல் வாகனங்கள் சிக்கி திணறி வருகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் பாரிமுனை, மடிப்பாக்கம் – 16 செ.மீ., கொரட்டூர் – 14 செ.மீ., நெற்குன்றம் – 13 செ.மீ. என கனமழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில் இன்று அதிகாலை கண்ணகி நகரில் துயர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. வழக்கம் போல தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர் வரலட்சுமி (30) மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மழைநீரில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் தண்ணீரில் மின்சாரம் பாய்ந்தது. அதில் கால் வைத்த வரலட்சுமி மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார்.
சம்பவ தகவலை அறிந்து விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதற்கிடையில், மின்சார வாரியத்தின் அலட்சியத்தைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
மழைநீரில் மின்சாரம் பாய்ந்து இளம் பணியாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை உலுக்கியுள்ளது.
English Summary
A tragedy that happened early in the morning The rain that had been pouring down overnight A sanitation worker who had put his foot in the stagnant water died of convulsions