பெரிய நடிகருக்கு, சிறிய இடமா? கொந்தளித்த ஹேமமாலினி எம்.பி.!
A small space for a big actor? Hemamalini MP gets furious
பெரிய இடம் கொடுத்திருந்தால் இது நடந்திருக்காது. தவெகவினர் சிறிய இடம் கேட்டிருந்தாலும், அரசு அவர்களுக்கு பெரிய இடத்தை வழங்கியிருக்க வேண்டும் என பாஜக எம்.பி., ஹேமமாலினி கூறினார்..
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டபோது கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்து உள்ளனர்.ஒற்றைப்படை எண்ணிக்கையில் தொடங்கிய பலி எண்ணிக்கை, படிப்படியாக அதிகரித்து, 41 ஆக உயர்ந்துள்ளது.
கரூரில் நிகழ்ந்த இந்த துயர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்தநிலையில் கரூர் கூட்ட நெரிசலால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதனிடையே கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.
அதன்படி ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தனது விசாரணையை நடத்தி வருகிறார். இந்தநிலையில்,
கரூர் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்பு பற்றி விசாரிப்பதற்காக பாஜக சார்பில் எம்.பி.,யும் நடிகையுமான ஹேமாமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் இன்று கரூருக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹேமமாலினி, கூறியதாவது;”கரூர் கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களையும் தனித்தனியாக சந்தித்து ஆறுதல் தெரிவித்து அவர்களிடம் பேசவுள்ளோம். உண்மையில் என்ன நடந்தது என்பதை கண்டறியவுள்ளோம்.
எப்படி இந்த இடத்தில் அனுமதி வழங்கப்பட்டது? பெரிய நடிகருக்கு, சிறிய சாலையை ஒதுக்கியது நியாயமில்லை. பெரிய இடம் கொடுத்திருந்தால் இது நடந்திருக்காது. தவெகவினர் சிறிய இடம் கேட்டிருந்தாலும், அரசு அவர்களுக்கு பெரிய இடத்தை வழங்கியிருக்க வேண்டும்.
கூட்ட நெரிசல் சம்பவம் விபத்து போல் தெரியவில்லை. இந்த சம்பவத்தில் உள்நோக்கம் இருப்பது போல் தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
English Summary
A small space for a big actor? Hemamalini MP gets furious