Zero Waste to Landfill : சென்னையில் குப்பை திருவிழா..!
A garbage festival in Chennai
குப்பைகளை பொறுப்புடன் ஒப்படைக்கும் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கான ஒரு வழிமுறையாக மாநில அளவிலான குப்பை திருவிழா தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
''பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 200 வார்டுகளில் மாபெரும் குப்பை சேகரிப்பு இயக்கமான குப்பைத் திருவிழா இன்று (21.01.2026) தொடங்கி நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உருவாகும் குப்பைகள் குப்பை கிடங்குகளுக்கு செல்லாத நிலையை உறுதி செய்து, அவற்றை மீண்டும் பயன்படுத்தும் வளமாக மாற்றும் வகையில் மாபெரும் குப்பை சேகரிப்பு இயக்கமான “குப்பைத் திருவிழா” 200 வார்டுகளிலும் இன்று (21.01.2026) தொடங்கி நடைபெற்றது.

23.01.2026 வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாபெரும் குப்பை சேகரிப்பு இயக்கத்தில் பழைய காகிதங்கள், நெகிழிகள், உடைந்த மரப் பொருட்கள், பழுதான மின்னணு உபகரணங்கள், உபயோகமில்லாத கண்ணாடி பொருட்கள், அட்டைப் பெட்டிகள் என பயன்படுத்தப்படாத குப்பைகளான பழைய பொருட்களை இன்று (21.01.2026) தனித்தனியாகப் பிரித்து சேகரம் செய்து. அதனை, வளமாக மாற்றவும், அகற்றிடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இவற்றை கண்காணிக்க சுகாதார ஆய்வாளர்கள் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. “உருவாகும்” குப்பைகள் குப்பை கிடங்குகளுக்கு செல்லாத நிலையை (Zero Waste to Landfill) உறுதிசெய்து, அவற்றை மீண்டும் பயன்படுத்தும் வளமாக மாற்றம் செய்வதே இதன் நோக்கமாகும். மேலும், மக்களிடையே குப்பைகளை கொட்டும் பழக்கத்திலிருந்து மாற்றி, அவற்றை பொறுப்புடன் ஒப்படைக்கும் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கான ஒரு மாநில அளவிலான திருவிழாவாகும்.'' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
A garbage festival in Chennai