சென்னை புரசைவாக்கத்தில் கொடூரம்; வீட்டில் தனியாக வசித்து வந்த முதியவர் கத்தியால் குத்திக் கொன்று நகைகள் கொள்ளையிட்ட பீகார் இளைஞர் கைது..!
A Bihar youth was arrested for stabbing an elderly man living alone in his house in Purasaivakkam and robbing him of his jewellery
புரசைவாக்கம் அரசப்பா தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (61). இவர் சென்னை அண்ணாநகரில் உள்ள துணிக்கடையில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி உஷா கடந்த 2024-ஆம் ஆண்டுஉயிரிழந்த நிலையில், குழந்தைகள் இல்லாததால், தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார்.
சமன்பவ தினமான நேற்று முன்தினம் இரவு, அவரது அண்ணன் மகன் விக்னேஷ் செல்போனில், பாலகிருஷ்ணனை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், பலமுறை அழைத்தும் பதில் இல்லாததால் இரவு 08.30 மணிக்கு நேரில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டு கதவு பூட்டப்பட்டு இருந்ததோடு, கதவின் கீழ் இடைவெளியில் ரத்தம் வழிந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனடியாக ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்த போது, பாலகிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்டு கதறிய அண்ணன் விக்னேஷ் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் பேரில், விரைந்து வந்த வேப்பேரி போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது பாலகிருஷ்ணன் உடலில் கத்தியால் பல இடங்களில் குத்தப்பட்ட காயங்கள் இருந்த்தை பார்த்து, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர், போலீசார் வீட்டை சோதனையிட்ட நிலையில், வீட்டில் வைத்திருந்த 05 சவரன் நகைகளும், வெள்ளிப் பொருட்களும் திருடு போனது தெரிய வந்துள்ளது. உடனடியாக அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார், ஆய்வு செய்தனர். அதில், இரவு நேரத்தில் ஒருவர் கையில் பையுடன் வீட்டிற்குள் சென்று சிறிது நேரம் கழித்து வெளியேறுவது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து பாலகிருஷ்ணன் பணிபுரிந்த துணிக்கடைக்கு சென்று விசாரணை நடத்தியதில்,அதில், அதே கடையில் தூய்மை பணியாளராக பணிபுரிந்த பீகாரை சேர்ந்த ஷாயம் மாத்தேவ் (35) என்பவரின் உருவம், சிசிடிவி கேமராவில் பதிவான உருவத்துடன் ஒத்துப் போயுள்ளது. அவர் வேலைக்கு வராததால், உடனே அவர் தங்கியிருந்த அறைக்கு போலீசார் சென்றனர்.
அப்போது ஷாயம் மாத்தேவ் பாலகிருஷ்ணனை கொலை செய்துவிட்டு, அவரது வீட்டில் திருடிய 05 சவரன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களுடன், மனைவியோடு பீகாருக்கு தப்பிச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்துள்ளார்.
உடனடியாக அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த கொள்ளையடித்த நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். போலீசாரின் விசாரணையில், வேலை செய்த இடத்தில் பாலகிருஷ்ணனுடன் ஷாயம் மாத்தேவ் பழகி வந்துள்ளார். பாலகிருஷ்ணன் மனைவி இறந்த பின்னர் அவர் தனியே வசிப்பதை அறிந்து, தினமும் அவரது வீட்டிற்கு சென்று தேவையான உதவிகள் செய்து வந்துள்ளார். இருவரும் தினமும் சேர்ந்து மது அருந்தி வந்துள்ளனர்.
அப்போது, அவரது வீட்டில் நகை இருப்பதை அறிந்த ஷாயம் மாத்தேவ், அதை திருட நேரம் பார்த்து காத்திருந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, இருவரும் மது அருந்தியுள்ளனர். பாலகிருஷ்ணன் போதையில் மயங்கியதும், வீட்டில் இருந்த பீரோவை ஷாயம் மாத்தேவ் திறந்துள்ளார்.
அப்போது சத்தம் கேட்டு பாலகிருஷ்ணன் எழுந்து கூச்சலிட்டுள்ளார். இதனால், வெளியில் தெரிந்தால் பிரச்சினை என கருதிய ஷாயம் மாத்தேவ், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, பாலகிருஷ்ணனை பல இடங்களில் குத்தி கொலை செய்துள்ளார். திருடிய நகைகளை பையில் அடைத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து, கைதான ஷாயம் மாத்தேவிடம் வேப்பேரி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
A Bihar youth was arrested for stabbing an elderly man living alone in his house in Purasaivakkam and robbing him of his jewellery