மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில் 46 தமிழ் நூல்கள்.! பிரெய்லி வடிவில் உருவாக்கம்..! - Seithipunal
Seithipunal


தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக இந்தியக் கல்வி அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஒரு ஆய்வு நிறுவனம் தான் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம். இந்த நிறுவனம் தமிழின் தொன்மை, தனித்தன்மை, தமிழர்களின் நாகரீகம், பண்பாடு போன்றவற்றின் சிறப்புகளைக் கவனத்தில் கொண்டு பல திட்டங்களைத் செயல்படுத்தி வருகிறது. 

இந்நிலையில், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பயன்பெறும் வகையில் திருக்குறள், தொல்காப்பியம் போன்ற 46 தமிழ் நூல்கள், பிரெய்லி வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் இரா.சந்திரசேகரன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்துள்ளதாவது, "தமிழில் உள்ள செவ்விலக்கியங்களின் சிறப்பை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் குறிக்கோளில் மொழிபெயர்ப்புகள், ஆய்வு நூல்கள் போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ் செவ்விலக்கிய நூல்களை உலக மொழிகளில் மொழிபெயர்க்கும் திட்டங்களை செம்மொழி நிறுவனம் தற்போது மேற்கொண்டுள்ளது. 

இதுமட்டுமில்லாமல், இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட உலக மொழிகளிலும் செவ்வியல் நூல்களை மொழிபெயர்த்து வெளியிடுதல், தொல்லியல் துறைகளில் ஆய்வு மேற்கொள்ளுதல், கி.பி.6-ம் நூற்றாண்டுக்கு முந்தைய கல்வெட்டியல், செவ்வியல் உள்ளிட்ட நூல்களின் சிறப்புகளை யூ-டியூப் மூலம் உலகிற்கு பரப்புதல் போன்ற திட்டங்களும் செயலாக்கம் பெறுகின்றன. 

இதனைத் தொடர்ந்து, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பிரெய்லி நூல் பதிப்புத்திட்டமும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தின் மூலம், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில், நன்னூல், தொல்காப்பியம், திருக்குறள், எட்டுத்தொகை உள்ளிட்ட 46 தமிழ் நூல்களையும் பிரெய்லி நூல்களாக வெளியிடும் திட்டம் முடியும் தருவாயில் உள்ளது. 

இந்தத் திட்டத்தில் 41 நூல்கள் செவ்வியல் நூல்கள் ஆகும். இவை அனைத்தும் மிக எளிய வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம்  தொடங்கப்பட்ட இந்தப் பணிகள் வரும் டிசம்பர் மாதம் முடிவடையும். அதன் பின்னர், நூல்கள் அச்சிடப்பட்டு, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்" என்று அந்த செய்திக்கு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

46 tamil books make in Braille format


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->