கோவை நவ-இந்தியா பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் குடியிருப்பில் தீ விபத்து; வெடித்துச் சிதறிய 22 சிலிண்டர்கள்..!
22 cylinders exploded in a fire at a northern state workers residence in the Nava India area of Coimbatore
கோவையில் கட்டுமானப் பணியில் ஈடுபடும் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கும் குடியிருப்பில் இன்று அடுத்தடுத்து 22 சிலிண்டர்கள் வெடித்து சிதறியுள்ளன.
கோவை நவ-இந்தியா பகுதியில் பிஹார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி, கட்டுமானத் தொழிலில் பணியாற்றி வருகின்றனர்.
அவர்கள் தங்க வசதியாக 75 தகர கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு கொட்டகையில் குறைந்தபட்சம் 5 பேர் வீதம் தங்கியிருந்து பணிக்கு சென்று வருகின்றனர்.
அத்துடன், குறித்த தொழிலாளர்கள் சமையல் செய்து சாப்பிடுவதற்கு வசதியாக ஒரு கொட்டகைக்கு ஒரு கேஸ் சிலிண்டர் இருந்துள்ளது. இதில், சமையல் கேஸ் சிலிண்டர், வணிக கேஸ் சிலிண்டர், 5 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர்களும் அடங்கியுள்ளன.
இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலைக்கு சென்றுள்ளனர். ஒருசில தொழிலாளர்கள் மட்டும் அந்த கொட்டகையில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. நண்பகலில் சிலர் சமையல் செய்த வேளையில், எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ பரவ தொடங்கியதால், அங்கிருந்த அனைவரும் அச்சமடைந்து வெளியே ஓட்டியுள்ளனர்.
அதன் பின்னர், இதுகுறித்து கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பின்னர் 03 தீயணைப்பு ஊர்திகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்துள்ளனர்.
அங்கு தீ கொளுந்து விட்டு எரிந்ததால் வெப்பம் தாங்காமல் அங்கிருந்த கேஸ் சிலிண்டர்கள் ஒவ்வொன்றாக வெடித்து சிதற தொடங்கியுள்ளது. உடனடியாக பீளமேடு, கோவை வடக்கு ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து ஊர்திகள் வரவழைக்கப்பட்டன. சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் கொட்டகைகளில் இருந்த 22 சிலிண்டர்கள் வெடித்து சிதறி சேதமடைந்துள்ளன. மேலும், வெடிக்காத நிலையில் இருந்த 30 சிலிண்டர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டன. தீ விபத்துக்கான காரணம் குறித்து பீளமேடு போலீஸார் விசாரிக்கின்றனர்.
English Summary
22 cylinders exploded in a fire at a northern state workers residence in the Nava India area of Coimbatore