தீபாவளி பாதுகாப்புக்காக 108 படை முழுத் தயாராக...!-ஒவ்வொரு விநாடியும் உயிர் காக்கும் பொறுப்பில்...!
108 brigade fully prepared for Diwali security Responsible saving lives every second
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு சுகாதாரத் திட்டத்தின் கீழ் செயல்படும் 108 அவசர ஆம்புலன்ஸ் சேவை தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.சுகாதாரத் துறை சார்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி, "மாநில அளவிலான அவசர சேவை நடவடிக்கைகள் 24 மணி நேரமும் முழுத் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மருத்துவம், காவல், தீயணைப்பு துறைகள் ஆகியவற்றுடன் இணைந்து 108 சேவை குழு பண்டிகை நாட்களில் பொதுமக்களின் உயிர் பாதுகாப்புக்காக மும்முரமாக பணியாற்றவுள்ளது.திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படும் 521 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அவசர அழைப்புகளை எதிர்கொள்ள முழு ஆயத்தத்தில் உள்ளன.
இதில் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக ஆம்புலன்ஸ்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. மேலும்,தீயணைப்பு சாதனங்கள், மீட்பு உபகரணங்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், அவசர மருந்துப் பொருட்கள் ஆகியவை அனைத்தும் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இந்த சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பணி நிமித்தமாக தயார் நிலையில் உள்ளனர். தீக்காயம், விபத்து அல்லது பிற அவசர நிலை ஏற்பட்டால், “108” என்ற ஒரே எண்ணை தொடர்பு கொண்டால் அருகிலுள்ள ஆம்புலன்ஸ் சில நிமிடங்களுக்குள் சென்று சேரும்.சென்னையில் அவசர அழைப்புகள் வந்தவுடன் 5 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் இடத்தை அடையும்; பிற மாவட்டங்களில் 5 முதல் 9 நிமிடங்களுக்குள் சேவை தொடங்கப்படும்.
அதேசமயம், மக்கள் நெரிசல் மிகுந்த குறுகிய சாலைகள் மற்றும் அடர்த்தியான குடியிருப்பு பகுதிகளில் பைக் ஆம்புலன்ஸ் சேவைகளும் தயாராக நிறுத்தப்பட்டுள்ளன.“பண்டிகை மகிழ்ச்சியோடு பாதுகாப்பும் இணைந்திருக்க வேண்டும்” என்பதே 108 குழுவின் நோக்கம். தீக்காயம் அல்லது அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால், 108 என்ற எண்ணை அழைத்தாலே போதும்,உயிர் காப்பாற்றும் உதவி சில நிமிடங்களில் உங்கள் வாசலில்!
English Summary
108 brigade fully prepared for Diwali security Responsible saving lives every second