மீண்டும் காயம்; ஆப்கன் தொடரிலிருந்து வெளியேறிய வருண் சக்கரவர்த்தி; ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பது சந்தேகம்..!
Varun Chakravarthys participation in the Asian Games is in doubt
இந்தியக் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மீதமுள்ள T20 தொடரிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளார். இதனால், விரைவில் தொடங்கவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் அவர் பங்கேற்பது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது, வருண் சக்ரவர்த்திக்கு தொடைப் பகுதியில் (Hamstring) ஏற்பட்ட காயம் ஏற்பட்டது. அதிலிருந்து சமீபத்தில்தான் குணமடைந்து அணிக்குத் திரும்பினார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது T20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், தனது 04 ஓவர்களில் வெறும் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 01 விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இருப்பினும், அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளதாக பிசிசிஐ (BCCI) வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவிகையில், ''இது அவருக்கு ஏற்பட்டுள்ள ஒரு புதிய காயமாகும். இதன் காரணமாக அவர் ஆப்கானிஸ்தான் தொடரிலிருந்து முழுமையாக விலக்கப்பட்டுள்ளார்;" என்று குறிப்பிட்டுள்ளார்.
வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கவுள்ளன. இந்த குறுகிய கால இடைவெளியில் அவர் குணமடைவது கடினம். இதனால் அவர் அந்தத் தொடரில் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது.
சமீபகாலமாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் அடிக்கடி காயமடைவதும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் (Centre of Excellence) காயம் மேலாண்மை மற்றும் மருத்துவக் கண்காணிப்பு முறைகளும் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன. காயத்திலிருந்து மீண்டு வந்தவுடனேயே வருண் சக்ரவர்த்திக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது இந்த விமர்சனங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான T20 தொடரை வெல்லும் முனைப்பில் இருக்கும் இந்திய அணிக்கும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வெல்லத் திட்டமிட்டுள்ள கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமையிலான அணிக்கும் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தியின் விலகல் மிகப்பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது.
English Summary
Varun Chakravarthys participation in the Asian Games is in doubt