உன்னாவ் அதிர்ச்சி சம்பவம்! கிரிக்கெட் மைதானத்தில் தேனீக்கள் தாக்குதல்..! - அம்பயர் பரிதாப உயிரிழப்பு
Unnao shocking incident Bees attack cricket ground Umpire tragically dies
உத்தர பிரதேசம் மாநிலத்தின் உன்னாவ் மாவட்டம், சுக்லகஞ்ச் பகுதியில் அமைந்துள்ள ராகுல் சப்ரு மைதானத்தில் இளைஞர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் உற்சாகமாக நடைபெற்று வந்தன. வழக்கம்போல விளையாட்டு சூடு பிடித்திருந்த நேரத்தில், எதிர்பாராத விதமாக இயற்கையே ஒரு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

போட்டி நடந்து கொண்டிருந்த வேளையில், கான்பூரைச் சேர்ந்த 65 வயதான மாணிக் குப்தா நடுவராக தனது பணியை செய்து கொண்டிருந்தார். திடீரென, தேனீக்கள் கூட்டமாக மைதானத்துக்குள் புகுந்து வீரர்களையும் நடுவர்களையும் கடுமையாக தாக்கத் தொடங்கின.
சூழ்நிலை கணநேரத்தில் பதற்றமாக மாறி, அனைவரும் தங்களை காப்பாற்றிக் கொள்ள ஓடித் தஞ்சம் புகுந்தனர்.இந்த தாக்குதலில் கடுமையாக காயமடைந்த மாணிக் குப்தா மைதானத்திலேயே மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கான்பூர் நகரிலுள்ள லாலா லஜ்பத் ராய் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.இந்த துயரச்சம்பவத்தை உறுதி செய்த கான்பூர் கிரிக்கெட் சங்கத் தலைவர், பல வீரர்களும் தேனீ தாக்குதலில் காயமடைந்துள்ளதாக தெரிவித்தார்.
ஒரு விளையாட்டு விழாவாக தொடங்கிய நாள், திடீரென சோகமாக மாறியதால் அப்பகுதி முழுவதும் துயரத்தில் மூழ்கியுள்ளது. மைதானத்தில் தேனீக்கள் கொட்டியதால் அம்பயர் உயிரிழந்த இந்த சம்பவம், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
Unnao shocking incident Bees attack cricket ground Umpire tragically dies