தேசிய தடகள போட்டி - 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்ற தமிழக வீரர்கள்.!!
tamilnadu players won gold medol of 100 mtr running in national athletics championship
இந்தியாவில் 64-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
அடுத்த மாதம் டோக்கியோவில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப்புக்கான அணித் தேர்வு போட்டியாகவும் இந்த போட்டி அமைந்திருப்பதால் இதில் வீரர், வீராங்கனைகளின் செயல்பாடு கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
இந்த நிலையில், முதல் நாளான நேற்று தமிழக வீரர், வீராங்கனைகள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினர். பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தின் இறுதி சுற்றில் இலக்கை நோக்கி 8 வீராங்கனைகள் சீறிப்பாய்ந்தனர். அவர்களில் மின்னல் வேகத்தில் ஓடிய திருச்சியை சேர்ந்த தனலட்சுமி என்பவர் 11.36 வினாடிகளில் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார்.
மற்றொரு தமிழக வீராங்கனையான நெல்லையைச் சேர்ந்த அபிநயா வெள்ளிப்பதக்கமும் (11.58 வினாடி), கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சினேகா (11.61 வினாடி) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.
இதேபோல், ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் கோயம்புத்தூரைச் சேர்ந்த தமிழரசு 10.22 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். அத்துடன் முந்தைய போட்டி சாதனையையும் முறியடித்தார். இரண்டாவதாக கர்நாடகாவின் மணிகண்டா (10.35 வினாடி), மூன்றாவது இடத்தை தமிழகத்தின் ராகுல் குமார் என்பவரும் (10.40 வினாடி) பிடித்தனர்.
English Summary
tamilnadu players won gold medol of 100 mtr running in national athletics championship