ஆசிய விளையாட்டு மாரத்தான்: 44 ஆண்டுகால காத்திருப்புக்கு முடிவு கட்டி வெள்ளிப் பதக்கம் வென்று சாவன் பர்வால் சாதனை!
Sawan Barwal Wins Historic Asian Games Marathon Silver Shattering National Record
ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான 42.195 கிலோமீட்டர் தூர மாரத்தான் ஓட்டத்தில், இந்திய வீரர் சாவன் பர்வால் 2 மணி 11.37 நிமிடங்களில் பந்தயத்தைக் கடந்து வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார். இப்போட்டியில் கலந்துகொண்ட 19 வீரர்களில் 2-வது இடத்தைப் பிடித்த இவர், பந்தய தூரத்தைக் குறைந்த நேரத்தில் கடந்து தனது சொந்தத் தேசிய சாதனையைத் தானே முறியடித்துப் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
44 ஆண்டுகால வரலாற்றுச் சாதனை:
இதன் மூலம் 44 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டு மாரத்தான் பிரிவில் இந்தியாவுக்குப் பதக்கம் ஈட்டித் தந்த மாபெரும் பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்பாகக் கடந்த 1982-ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில், தமிழ்நாட்டைச் சேர்ந்த குத்தப்பா சீதாரன் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். ஒட்டுமொத்தமாக ஆசிய விளையாட்டு மாரத்தான் வரலாற்றில் பதக்கம் வென்ற 4-வது இந்தியராகவும் சாவன் பர்வால் முத்திரை பதித்துள்ளார். 1951-ஆம் ஆண்டு அறிமுக ஆசிய விளையாட்டில் சோட்டா சிங் தங்கமும், சூரத்சிங் வெண்கலமும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
எளிய பின்னணியும் ஓட்டப் பயணமும்:
இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான சாவன் பர்வால், இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். ஓட்டுநராகப் பணியாற்றும் தந்தையின் மகனான இவர், தனது 14-வது வயதில் 1,500 மீட்டர் ஓட்டத்தில் தடகளப் பயணத்தைத் தொடங்கினார். தொடர்ந்து 5,000 மற்றும் 10,000 மீட்டர் போட்டிகளில் களமிறங்கிய அவர், பின்னர் நீண்ட தூரப் பிரிவான மாரத்தானுக்கு மாறினார்.
இப்போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த இச்சிடாகா யமாஷிதா (2 மணி 10.49 நிமிடம்) தங்கப் பதக்கத்தையும், சீன வீரர் பெங் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். களமிறங்கிய மற்றொரு இந்திய வீரரான கார்த்திக் கர்கெரா 17-வது இடத்தைப் பிடித்தார். தடகளப் பிரிவில் இந்தியாவுக்குக் கிடைத்த இந்த 5-வது பதக்கம், இந்திய விளையாட்டு உலகிற்குப் பெரும் பெருமிதத்தைச் சேர்த்துள்ளது.
English Summary
Sawan Barwal Wins Historic Asian Games Marathon Silver Shattering National Record