14 வயதில் தேசிய மரியாதை! - கிரிக்கெட் உலகை அசர வைத்த வைபவ் சூர்யவன்ஷிக்கு பால் புரஸ்கார்...!
National honour at age 14 Vaibhav Suryavanshi who amazed cricket world receives Bal Puraskar award
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 14 வயது கிரிக்கெட் அதிசயம் வைபவ் சூர்யவன்ஷி, தனது சிறுவயது கனவுகளை சாதனைகளாக மாற்றி இந்திய கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறார். நான்கு வயதில் பேட் பிடித்த அவரது பயணம், தந்தையின் ஊக்கத்துடன் ஒன்பது வயதில் சமஸ்திபூரில் உள்ள கிரிக்கெட் அகாடமியில் முறையான பயிற்சியாக மாறியது.
அங்கிருந்து தொடங்கிய பயணம் இன்று தேசிய அளவில் பேசப்படும் ஒரு இளம் நட்சத்திரத்தை உருவாக்கியுள்ளது.ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் வைபவ், 38 பந்துகளில் 101 ரன்கள் குவித்து இளம் வயதில் சதம் அடித்த வீரர் என்ற அபார சாதனையைப் படைத்தார்.

தொடர்ந்து தனது திறமையால் பல சாதனைகளை முறியடித்து வரும் அவர், தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரில் தனது முதல் சதத்தையும் பதிவு செய்து, மீண்டும் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.இவ்வாறு 14 வயதிலேயே சாதனைகளின் உச்சியைத் தொட்ட வைபவ் சூர்யவன்ஷியின் திறமைக்கு மத்திய அரசு உரிய அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதை வழங்கினார். சிறந்த இளம் திறமையாளர்களுக்காக வழங்கப்படும் உயரிய குடிமகன் விருதுகளில் இதுவும் ஒன்று.
இந்த மரியாதைக்குரிய விருதை பெறுவதற்காக, இன்று நடைபெறும் விஜய் ஹசாரே டிராபி போட்டியில் அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இளம் வயதிலேயே சாதனைகளும், தேசிய அங்கீகாரமும் பெற்ற வைபவ் சூர்யவன்ஷி, இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நம்பிக்கையாக பார்க்கப்படுகிறார்.
English Summary
National honour at age 14 Vaibhav Suryavanshi who amazed cricket world receives Bal Puraskar award