உலக ரேபிட் செஸ் மேடையில் இந்திய கொடி பறக்க…! - இரட்டை வெண்கலம் கைப்பற்றல்
Indian flag flies high world rapid chess stage securing double bronze medal
உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் தொடர், கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் முதற்கட்டமாக நடைபெற்ற ரேபிட் செஸ் போட்டிகள் மூன்று நாட்கள் தொடர்ந்து நடந்தன.
இந்தப் போட்டிகளில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஒட்டுமொத்தமாக 3-வது இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றினர்.13 சுற்றுகளைக் கொண்ட ஓபன் பிரிவில், உலக சாம்பியன் நார்வே வீரர் மக்னஸ் கார்ல்சன் (9 வெற்றிகள், 3 டிரா, 1 தோல்வி) அபாரமான ஆட்டத்துடன் முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
அவரைத் தொடர்ந்து ரஷ்ய வீரர் விளாடிஸ்லாவ் 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.இந்தியாவின் முன்னணி கிராண்ட்மாஸ்டர் அர்ஜூன் எரிகைசி, 9.5 புள்ளிகளைச் சேர்த்து 3-வது இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஆனால் பதக்கப் போட்டியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தமிழக வீரர்கள் குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா தலா 8.5 புள்ளிகளுடன் முறையே 20-வது மற்றும் 28-வது இடங்களை பிடித்து ரசிகர்களை சிறிதளவு ஏமாற்றினர்.
11 சுற்றுகளைக் கொண்ட பெண்கள் பிரிவில், ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரா கோர்யாச்கினா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தனது வாழ்க்கையில் முதல் முறையாக தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். சீன வீராங்கனை ஜூ ஜினெர் 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்தியாவின் அனுபவமிக்க வீராங்கனை கோனெரு ஹம்பி, 8.5 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றார்.பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அர்ஜூன் எரிகைசி மற்றும் கோனெரு ஹம்பி ஆகியோருக்கு ரசிகர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
ரேபிட் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், உலக பிளிட்ஸ் செஸ் போட்டிகள் இன்று மற்றும் நாளை அதே தோகா நகரில் நடைபெறவுள்ளன. இந்திய வீரர்களிடமிருந்து மேலும் பதக்கங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
English Summary
Indian flag flies high world rapid chess stage securing double bronze medal