உருக்கமான நினைவுகள்! 3–6 மாதங்கள் தான் வாழ்க்கை…! - புற்றுநோயை வென்று கிரிக்கெட்டில் மீண்ட யுவராஜ்!
Heartwarming memories Only 3 to 6 months of life left Yuvraj who overcame cancer and returned cricket
புற்றுநோயை எதிர்த்து உயிர்ப்போராட்டம் நடத்தி, அதனை வென்று மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் காலடி வைத்த அனுபவத்தை இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் உருக்கமாக பகிர்ந்துள்ளார்.
புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டபோது, “இனி 3 முதல் 6 மாதங்கள் மட்டுமே வாழ முடியும்” என மருத்துவர்கள் கூறிய செய்தி தன்னை உலுக்கியதாக அவர் தெரிவித்தார்.அந்த அனுபவங்களை நினைவுகூர்ந்த யுவராஜ்,“உயிர் காலம் குறைவு என்று ஒருவர் சொன்னவுடன், மனதில் முதலில் தோன்றுவது மரண பயமே.

என்னுடைய நுரையீரல் மற்றும் இதயத்துக்கிடையில் இருந்த கட்டி, நரம்பு மண்டலத்தை அழுத்தி, மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை உருவாக்கியது. உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் நிலைமை மோசமாகும் என்று மருத்துவர்கள் எச்சரித்தனர்”என்று கூறினார்.
அந்த காலகட்டத்தில்தான், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு யுவராஜுக்கு கிடைத்திருந்தது. ஆனால் அதற்கு முன் நடைபெற்ற சுமார் 40 போட்டிகளில் அவர் 12-வது வீரராக மட்டுமே அணியில் இருந்ததாகவும், நீண்ட காலக் காத்திருப்புக்குப் பிறகு கிடைத்த அந்த வாய்ப்பை விட்டுவிட்டு, அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை மேற்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற கடினமான முடிவை எடுக்க வேண்டியதாகவும் அவர் பகிர்ந்தார்.
அமெரிக்காவில் சிகிச்சை அளித்த டாக்டர் என்ஹார்ன்,“நீங்கள் இங்கிருந்து புற்றுநோய் இல்லாத மனிதராக வெளியேறுவீர்கள்”என்று கூறிய வார்த்தைகள் தனக்கு அபாரமான தைரியத்தையும் நம்பிக்கையையும் அளித்ததாக யுவராஜ் தெரிவித்தார்.
அனைத்து சிகிச்சைகளும் முடிந்து, மீண்டும் கிரிக்கெட் விளையாடலாமா என்று எண்ணிய அந்த தருணம், தனக்கு இரண்டாவது வாழ்க்கை கிடைத்தது போல இருந்தது எனவும், “மீண்டும் விளையாட முடியாது” என்று உலகம் சொன்னபோதும், அதை மைதானத்தில் நிரூபித்துக் காட்ட வேண்டும் என்ற உறுதி தனக்குள் எழுந்ததாகவும் அவர் கூறினார்.
2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியதில், யுவராஜ் சிங்கின் அதிரடி ஆட்டம் முக்கிய பங்காற்றியது.
இந்த இரண்டு வரலாற்று வெற்றிகளிலும் இந்திய அணியின் தூணாக திகழ்ந்த யுவராஜ், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத வீரராக முத்திரை பதித்தார்.
English Summary
Heartwarming memories Only 3 to 6 months of life left Yuvraj who overcame cancer and returned cricket