''நாட்டின் குற்றவியல் நீதித்துறை நடைமுறைகள் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது;'' உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வேதனை..!
Chief Justice Surya Kant expressed dismay that the countrys criminal justice system operates in favor of criminals
பீகார் மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பாதிக்கப்பட்டோர் உரிமைகள் மையத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் திறந்து வைத்து உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில்; நீண்ட காலமாகவே நமது குற்றவியல் நீதி விசாரணை நடைமுறைகள், குற்றவாளிகளையும் அவர்கள் செய்த குற்றங்களையும் மையப்படுத்தியே கட்டமைக்கப்பட்டுள்ளன என்று வேதனை தெரிவித்ததோடு, குற்றவியல் நீதித்துறை நடைமுறைகள் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்டு நீதி தேடி வரும் அப்பாவி மக்கள், தங்களுக்கான வாக்குமூலத்தை பதிவு செய்த பின்னர், சாட்சி சொல்லும் நாள் வரை ஒட்டுமொத்த நடைமுறையிலிருந்தே காணாமல் போய்விடுகின்றனர் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இடைப்பட்ட மாதங்களில் அவர்களுக்கு என்ன நேர்கிறது என்பதற்கு எவரும் பொறுப்பேற்பது இல்லை என்றும், ஏற்கெனவே காயமடைந்து வரும் அந்த நபர்கள், புரியாத சட்ட அமைப்பில் மீண்டும் சிக்கித் தவிக்கும் போது அது அவர்களுக்கு இரண்டாவது காயத்தை ஏற்படுத்துகிறது என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.

அப்போது ''அமைதியான முறையில் போராடும் மாணவர்கள் மீது போலீசார் நடத்தும் தடியடி உள்ளிட்ட அடக்குமுறைகள்'' குறித்து மாணவி ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ''அமைதியாக போராடும் மாணவர்களின் உரிமையை நிலைநாட்டுவதில் நீதித்துறை உறுதியாகவுள்ளது. ஆனால், அங்கு உரிமை மீறல் நடக்கும்போது நீதிமன்றங்கள் ஒருபோதும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது'' என்று பதிலளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து கொலிஜியம் அமைப்பின் மாறுபட்ட கருத்துக்கள் ஏன் பகிரங்கப்படுத்தப்படுவதில்லை என்ற மற்றொரு கேள்விக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் விளக்கமளித்துள்ளதாவது;
''தனிநபரின் கண்ணியம் பாதிக்கப்படும் சூழலில் வெளிப்படைத்தன்மைக்கு என்று சில எல்லைகள் உள்ளன. கொலிஜியத்தின் குறிப்பில் ஒருவரைப் பற்றிய எதிர்மறையான கருத்து பதிவு செய்யப்பட்டு அது பொதுவெளியில் வெளியானால் ஒரு நீதிபதி எவ்வாறு பணியாற்ற முடியும்?'' என்று பதில் அளித்துள்ளார்.
அத்துடன், 05 ஆண்டு சட்டப் படிப்பை 04 ஆண்டு வகுப்பறை கல்வி மற்றும் இறுதி ஆண்டு கட்டாய நீதிமன்ற பயிற்சி என மாற்றி அமைக்கும் துணைவேந்தர் பைசான் முஸ்தபாவின் திட்டமிடல் யோசனைக்கு பாராட்டு தெரிவித்த தலைமை நீதிபதியின் இந்த கருத்துக்கள் மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
English Summary
Chief Justice Surya Kant expressed dismay that the countrys criminal justice system operates in favor of criminals