வேகப்பந்தை வெளுத்து வாங்கிய அதிரடி நாயகன்; ராபின் ஸ்மித் காலமானார் ..!
Former England cricketer Robin Smith passes away.
1980-இன் இறுதியிலும் 90- களிலும் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தவர்களில் ஒருவர் இங்கிலாந்து அணி வீரர் ராபின் ஸ்மித். 1990- இல் இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ்-க்கு சுற்றுப்பயணம் செய்தது. அப்போது பந்து வீச்சாளர்கள் ராபின் ஸ்மித்துக்கு பவுன்சர்களாக வீசி பயமுறுத்த நினைத்தனர். ஆனால் அவர்களின் திட்டங்களை தவிடு பொடியாக்கி அதிரடியாக ஆடியவர் ராபின்.
தொடர்ந்து, ஆண்டிகுவாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அம்புரோஸ், கர்ட்னி வால்ஷ், இயான் பிஷப் ஆகியோர் அடங்கிய வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர்கள் இதே மாதிரி பந்துகளை எகிறி எகிறி வீசினர். இரண்டு ஓவர்களில் 11 பந்துகளை அடுத்தடுத்து பவுன்சர்களாக வீசியதில், ராபின் ஸ்மித்தின் தாடையை பந்து தாக்கியது. ஆனாலும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் ராபின் ஸ்மித்தின் ஆட்டம் தொடர்ந்தது.

பின்னர், 1992-இல் உலகக்கோப்பையில் இறுதியாட்டம் வரை முன்னேறிய இங்கிலாந்து அணியில் ஒரு அங்கமாக திகழ்ந்த பெருமை ராபினுக்கு உண்டு. 1993-இல் இங்கிலாந்து அணி இந்திய சுற்றுப்பயணம் வந்தது. அப்போது சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றில் இங்கிலாந்து அணியில் அதுவரை மத்திய வரிசையில் விளையாடி வந்த ராபின் ஸ்மித் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டார்.
சென்னையில் அப்போது நிலவிய சுட்டெரிக்கும் வெயிலில் ராபின் ஸ்மித் கூலர் காலர் எனும் குளிரூட்டும் உபகரணத்துடன் விளையாடி இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்தார். 80-ஸ் கிட்ஸ்களுக்கு இன்றளவும் மறக்க முடியாத நினைவாக அந்த நாள் இருக்கும்.

தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் பிறந்தவர் ராபின் ஸ்மித், இங்கிலாந்து அணிக்காக 1988-ஆம் ஆண்டு தொடங்கி 1996 வரை 62 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 04 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ள அவர், 1996-ஆம் ஆண்டு ஓய்வு அறிவித்தார். அதன்பின்னர் மனஉளைச்சலுக்கு ஆளான அவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானார். நுரையீரல் பாதிப்படைந்து இருந்த நிலையில் தனது 62-வது வயதில் ராபின் ஸ்மித் காலமாகியுள்ளார்.
English Summary
Former England cricketer Robin Smith passes away.