இந்தியாவில் டி20 உலகக் கோப்பை விளையாட மறுக்கும் வங்கதேசம் – ஐசிசி முடிவால் புதிய சர்ச்சை!ஐசிசியை சாடிய வங்கதேசம் - Seithipunal
Seithipunal


ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட இந்தியாவுக்கு வர முடியாது என்று வங்கதேச கிரிக்கெட் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சமீப காலமாக வங்கதேசத்தில் இந்து மக்கள் மீது தாக்குதல் நடந்ததாக வெளியான செய்திகள், இரு நாடுகளுக்கிடையிலான அரசியல் மற்றும் விளையாட்டு உறவுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த அறிவிப்பு சர்வதேச கிரிக்கெட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தில் நடந்ததாக கூறப்படும் தாக்குதல்களில் சிலர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் பல்வேறு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன. குறிப்பாக, வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாடக்கூடாது என்று ஆளும் கட்சியைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் நோக்கில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கொல்கத்தா அணிக்கு முன்எச்சரிக்கையாக அறிவுரை வழங்கியது. இதனை ஏற்றுக் கொண்ட கொல்கத்தா அணி, ரூ.9.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்த முஸ்தபிசுர் ரஹ்மானை தங்களது அணியிலிருந்து விடுவித்தது.

இதற்குப் பதிலடியாகவே, 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவில் நடைபெறும் தங்களது போட்டிகளில் விளையாட மாட்டோம் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்க உள்ள இந்த உலகக் கோப்பையில், இந்தியா முக்கிய நடத்துநர் நாடாக இருப்பதால், வங்கதேசத்தின் இந்த முடிவு போட்டியின் ஒட்டுமொத்த அமைப்பில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனுடன், ஐபிஎல் போட்டிகளை வங்கதேசத்தில் ஒளிபரப்புவதற்கும் அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், தங்களது உலகக் கோப்பை போட்டிகளை இலங்கையில் நடத்த அனுமதி வழங்குமாறு வங்கதேசம் ஐசிசியிடம் கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கையை ஜெய் ஷா தலைமையிலான ஐசிசி நிர்வாகக் குழு செவ்வாய்க்கிழமை விவாதித்தது. ஆனால், திடீரென போட்டிகளை இலங்கைக்கு மாற்றுவதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக ஐசிசி கருதியது. இதையடுத்து, “இந்தியாவிலேயே விளையாடுங்கள் அல்லது விளையாடாமல் எதிரணியிடம் புள்ளிகளை இழக்க தயாராக இருங்கள்” என்ற கடுமையான பதிலை ஐசிசி வங்கதேசத்துக்கு வழங்கியதாக கூறப்படுகிறது.

ஐசிசியின் இந்த அணுகுமுறையை வங்கதேச கிரிக்கெட் வாரியம் கடுமையாக விமர்சித்துள்ளது. தங்களது பாதுகாப்பு கவலைகளை ஐசிசி தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து வங்கதேச அரசின் ஆலோசகர் ஆசிப் நஸ்ருள் பேசுகையில், “நாங்கள் கிரிக்கெட்டை வெறித்தனமாக நேசிக்கும் நாடு. உலகக் கோப்பையில் விளையாட விரும்புகிறோம். ஆனால் அதற்காக எங்கள் நாட்டின் கண்ணியம், வீரர்கள், பார்வையாளர்கள், பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை பணையம் வைக்க முடியாது. ஐசிசி அனுப்பிய கடிதத்தை பார்த்தபின், இந்தியாவில் வங்கதேச வீரர்களுக்கு உருவாகியுள்ள பாதுகாப்பு நிலைமையை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது” என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ஐசிசி, இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே நடைபெறும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளே 2026 டி20 உலகக் கோப்பையில் வங்கதேச அணியின் பங்கேற்பை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bangladesh refuses to play T20 World Cup in India ICC decision sparks new controversy Bangladesh slams ICC


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->