2026 டி20 உலகக் கோப்பை: இந்தியா வென்றால் உங்களுக்காக நான் இதை பண்றேன்..சூரியகுமார் யாதவுக்கு சுனில் கவாஸ்கர் செய்த சத்தியம்!
2026 T20 World Cup If India wins I will do this for you Sunil Gavaskar promise to Suryakumar Yadav
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்த உள்ள 2026 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், நடப்பு சாம்பியனாக இந்திய கிரிக்கெட் அணி களம் இறங்கவுள்ளது. கேப்டன் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி பலம் வாய்ந்ததாக இருப்பதால், இம்முறையும் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு அதிகம் என ரசிகர்களும் கிரிக்கெட் வட்டாரங்களும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில், உலகக் கோப்பை தொடர் குறித்து முன்னாள் இந்திய வீரர்கள் பலரும் தங்களது கருத்துகள், கணிப்புகள் மற்றும் ஆலோசனைகளை சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்த கருத்து தற்போது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றால், மைதானத்திலேயே நடனம் ஆடுவேன் என்று சூரியகுமார் யாதவுக்கு அவர் சத்தியம் செய்துள்ளார். இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், “இந்திய அணி இந்த முறை டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். சூரியகுமார் யாதவ் கோப்பையை கையில் தூக்கும் அந்த நிமிடமே, நான் மைதானத்தில் டான்ஸ் ஆட தொடங்குவேன். இந்த வயதில் என்னால் அதிகமாக நடனம் ஆட முடியாமல் போகலாம். ஆனால், மைதானத்தில் நிச்சயம் என்னுடைய நடனம் இருக்கும்” என்று உற்சாகமாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய அணி உலகக் கோப்பையை வெல்வதை தேசிய கொடியுடன் நேரில் பார்க்க வேண்டும் என்பதே தனது நீண்ட நாள் ஆசை என்றும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணி முக்கியமான ஆட்டங்களில் வெற்றி பெறும் போதெல்லாம், மைதானத்தில் இருந்து சுனில் கவாஸ்கர் உற்சாகமாக இந்திய அணியை ஊக்குவித்த காட்சிகள் ரசிகர்களுக்கு நன்கு நினைவில் உள்ளன.
மூத்த ஜாம்பவானின் இந்த உற்சாகமான வாக்குறுதி, ஒருபுறம் இந்திய அணியின் மீது உள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதோடு, மற்றொரு புறம் ரசிகர்களிடையே 2026 டி20 உலகக் கோப்பை மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இந்திய அணி மீண்டும் கோப்பையை கைப்பற்றினால், சாம்பியன் கொண்டாட்டத்துடன் சேர்த்து சுனில் கவாஸ்கரின் மைதான நடனமும் வரலாற்றுச் சம்பவமாக மாறலாம் என்பதே ரசிகர்களின் நம்பிக்கை.
English Summary
2026 T20 World Cup If India wins I will do this for you Sunil Gavaskar promise to Suryakumar Yadav