பூஜைக்கு வெற்றி தரும் வெற்றிலை... இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்?!
vetrilai pakku why put infront of god
எந்த செடியாக இருந்தாலும் அவற்றில் பூக்கள், காய்கள், பழங்கள் என்று ஏதேனும் ஒன்று இருக்கும். ஆனால் வெற்றிலை கொடியாக படர்ந்து வெற்றிலையை மட்டுமே கொண்டிருக்கிறது. அதனால்தான் வேறு எந்த இலைக்கும் இல்லாத சிறப்பாக வெற்றிலை மட்டும் பூஜையில் தனித்துவம் பெற்றிருக்கிறது.
வெற்றிலை மகாலட்சுமி வாசம் செய்யும் பொருட்களில் ஒன்று. பண்டிகைகள், விசேஷம், விரதங்கள், திருமணம் என அனைத்திலும் முக்கிய இடம் வகிக்கிறது வெற்றிலை. இறைவனுக்கு வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது நமது மரபு. தாம்பூலம் எனப்படும் வெற்றிலைக்கு ஜீரணத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் உண்டு.
விருந்தினர்களுக்கும், சுபநிகழ்ச்சியின்போது நமது வீட்டிற்கு வருபவர்களுக்கும் சாக்லேட் முதலிய நவநாகரீக பொருட்களை கொடுக்கும் பழக்கம் பெருகி வருகிறது. என்ன கொடுத்தாலும் வெற்றிலை பாக்கு தவறாமல் கொடுக்க வேண்டும்.
வெற்றிலை மருத்துவ குணம் நிறைந்தது. இதனை தாம்பூலம் என்றும் அழைப்பர். தாம்பூலத்தின் பின்பக்க இடதுபுறம் மற்றும் தாம்பூல மத்திய பாகம் இவை இரண்டும் சிவபெருமானை குறிக்கும்.
வெளிப்பக்கம்(உள்) வெற்றிலையின் மத்திய பாகம் சந்திரனை குறிக்கும். தாம்பூலத்தின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதிதேவியும் இருப்பதாக ஐதீகம். இறைவனுக்கு எத்தனை பதார்த்தங்களை நிவேதனம் செய்தாலும் வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் அந்நிவேதனம் முற்றுப்பெறுவதில்லை.
பூஜை மற்றும் திருமணம் ஆகியவற்றின் போதும் அவை சுபமாக நடந்தேற வேண்டும் என்பதற்காக வெற்றிலை பாக்கு படைக்கப்படுகிறது.
வெற்றிலையும் பாக்கும் மகாலட்சுமியின் அம்சங்களாகும். விருந்தினர்களுக்கு சுபநிகழ்ச்சியின்போது வெற்றிலையும் பாக்கும் கொடுத்தால் குடும்பம் செழித்தோங்கும் என்பது நம்பிக்கை.
வெற்றிலையை வாட விடக்கூடாது. அப்படி வாட விடுவது வீட்டுக்கு சுபமல்ல. வெற்றிலை பாக்கை எப்போதும் வலதுகையால் தான் வாங்க வேண்டும்.
மகிமை மிக்கதும் மங்களகரமானதுமான வெற்றிலை, வெற்றியின் அடையாளமாகவே கருதப்படுகிறது. அபூர்வம் நிறைந்த வெற்றிலை பாக்கை இறைவனுக்கு வைத்து படைக்கும்போது நமது பிரார்த்தனை முழுமையாக இறைவனை சென்றடையும் என்பது ஐதீகம்.
காய், பழம் என எதுவுமே இல்லாத வெறும் இலைதான். ஆனால் வெறுமனே இல்லாமல் இவை இல்லாதது பூஜையல்ல என்ற உயர்ந்த இடத்தைப் பிடித்திருக்கிறது. பூஜை செய்தால் வெற்றி தரும் என்றால்.... பூஜை செய்த பலனை பூர்த்தியடைய செய்து பூஜைக்கு வெற்றி தருவது வெற்றிலை தான்.
English Summary
vetrilai pakku why put infront of god