சகல சௌபாக்கியங்களையும் தரும் வைகுண்ட ஏகாதசி.. விரதம் இருப்பது எப்படி?
vaikunta ekasashi 2020
மார்கழி மாதத்தில் வரும் பண்டிகைகளில் மிகவும் சிறப்பானது, வைகுண்ட ஏகாதசி. மார்கழி மாத வளர்பிறையில் வரும் இந்த ஏகாதசிக்கு முக்தி ஏகாதசி, முக்கோடி ஏகாதசி, பெரிய ஏகாதசி என்று பல பெயர்கள் உண்டு.
வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருக்க முடியாதவர்கள், வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்தால் சிறப்பான பலனை அடையலாம். இந்த ஆண்டு டிசம்பர் 25ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று வைகுண்ட ஏகாதசி வருகிறது.
வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருப்பது எப்படி?
ஏகாதசி விரதம் இருப்பவர்கள் அதற்கு முன் தினமான தசமி நாளில் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு விரதத்தை தொடங்க வேண்டும்.
ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்தவுடன் நீராடிவிட்டு, இறைவனை வழிபட்டு விரதத்தைத் தொடங்க வேண்டும்.
ஏகாதசி திதி முழுவதும் உணவு உட்கொள்ளாமல் இருக்க வேண்டும். குளிர்ந்த நீரை மட்டும் பருகலாம்.
ஏகாதசி விரதத்தின்போது எக்காரணம் கொண்டும் துளசியை பறிக்கக்கூடாது. பூஜைக்கான துளசியை முதல்நாளே பறித்து விடவேண்டும்.
மேலும், 7 முறை துளசி இலையை மட்டும் சாப்பிடலாம். துளசி இலை வெப்பம் தரக்கூடியது. ஏகாதசி விரதம் இருப்பது மார்கழி மாதமான குளிர்காலம் என்பதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை உட்கொள்ள வேண்டும்.
முழு நாளும் உணவருந்தாமல் இருக்க முடியாதவர்கள் நெய், காய்கனிகள், பழங்கள், நிலக்கடலை, பால், தயிர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து சாப்பிடலாம்.
இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும், விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் துதி முதலியவற்றை ஓதுவதுமாக இரவுப் பொழுதை உறங்காது கழிக்க வேண்டும்.
மறுநாள் துவாதசி அன்று காலையில் 21 வகை காய்கறிகள் உணவில் இடம் பெற வேண்டும். இதில் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் அவசியம் இடம் பெற வேண்டும்.
துவாதசி அன்று அதிகாலையில் உணவு அருந்துவதை பாரணை என்கிறார்கள். துவாதசியில் அதிகாலையில் உணவு சாப்பிட்ட பிறகு, அன்று பகலிலும் உறங்கக்கூடாது.
ஏகாதசி விரதம் பத்தாவது திதியாகிய தசமி, பதினொன்றாவது திதியாகிய ஏகாதசி, பனிரெண்டாம் திதியாகிய துவாதசி என்று மூன்று திதிகளிலும் மேற்கொள்ளும் விரதமாக அமைந்துள்ளது.
வைகுண்ட ஏகாதசி விரதமிருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வார்கள். மேலும், சகல சௌபாக்கியங்களையும், ஆரோக்கியமான உடல்நலத்தையும் பெறுவார்கள்.