வரவிருக்கிறது ராம நவமி... ஸ்ரீராமரை வழிபட தயாராகுங்கள்.!! - Seithipunal
Seithipunal


மகாவிஷ்ணு பல அவதாரங்கள் எடுத்திருந்தாலும், அவற்றில் பெரிதும் போற்றப்படும் அவதாரமாக இருப்பது ராம அவதாரம் என்றால் அது மிகையாகாது. பூமியில் பிறப்பெடுத்து இறுதி வரை நீதி நெறி வழுவாமல், ஒழுக்கம் மிகுந்த மனிதனாக வாழ்ந்தவர் என்ற வகையில் ராமர் பெரும் சிறப்பை எய்துகிறார்.

சிவபெருமானிடம் பல வரங்களை பெற்ற இராவணன், தேவர்களையும், முனிவர்களையும், மனிதர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். அவனை அழிப்பதற்காக, அயோத்தியை ஆண்டு வந்த தசரத மன்னனுக்கு மகனாகப் பிறந்தார் இராமர். உரிய நேரம் வந்தபோது இராவணனையும், அவனது அசுர கூட்டத்தையும் அழித்தார். அதர்மத்தை அழித்து, தருமத்தை நிலை நாட்டினார்.

இராவணனை அழிக்கும் பொருட்டு மண்ணில் தோன்றி, மனித குலத்திற்கு ஒழுக்கம் மற்றும் தர்மத்தை கற்றுக் கொடுத்த ராமபிரான் அவதரித்த தினம் ராம நவமி என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீராமன், நவமி திதியில் அவதரிக்கும் போது, புனர்பூச நட்சத்திரத்தில் நான்காம் பாதத்திலும், ஐந்து கிரகங்கள் உச்சத்திலும் இருந்தன. கடக லக்னத்தில் நண்பகல் வேளையில், ராமவதாரம் நடந்தேறியது.

அஷ்டமி, நவமி திதியின் கவலை :

அஷ்டமி, நவமி தினங்களில் எந்த காரியத்தையும் செய்ய மாட்டார்கள். அந்த இரு திதிகளையும் புறக்கணித்து விடுவார்கள். இதனால் கவலையுற்ற அஷ்டமி, நவமி ஆகிய இரு திதிகளும், மகா விஷ்ணுவிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்டுள்ள குறையை கூறினர்.

அப்போது விஷ்ணு பகவான், 'உங்களையும் மக்கள் அனைவரும் போற்றி துதிக்கும் நாள் வரும்" என்று உறுதியளித்தார். அதன்படியே வாசுதேவர்-தேவகி ஆகியோருக்கு மகனாக, அஷ்டமி திதியில் கிருஷ்ணர் தோன்றினார். அன்றைய தினம் கிருஷ்ணஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. நவமி திதியில் தசரதர்-கௌசலை தம்பதியருக்கு மகனாக பிறந்தார் ராமபிரான். அன்றைய தினம் ராம நவமி திருநாளாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த வருடம் 21.04.2021 (சித்திரை 08) புதன்கிழமை அன்று ராம நவமி வருகிறது.

விரதமுறை :

ராம நவமியன்று அதிகாலையில் குளித்துவிட்டு, வீட்டை தூய்மைப்படுத்தி விரதத்தை கடைபிடிக்க வேண்டும். பூஜை அறையில் ராமர் படத்தை நன்றாக சுத்தம் செய்து குங்குமம், சந்தனம் போன்றவற்றால் பொட்டிட்டு, துளசிமாலை அணிவிக்க வேண்டும். பின் பழம், வெற்றிலை, பூ இவைகளை வைத்து ஸ்ரீராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.

சாதம், பாயாசம், பானகம், வடை, நீர்மோர், தேங்காய், பஞ்சாமிர்தம், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு இவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். அன்று உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். ராமரை பற்றிய நூல்களை படித்தும், பாராயணம் செய்வதுமாக இருக்க வேண்டும். அன்று ஸ்ரீராமர் கோவில்களில் நடைபெறும் பட்டாபிஷேகத்தை கண்டு களிக்கலாம். அர்ச்சனை முடிந்தபின் நைவேத்தியமான சர்க்கரை பொங்கலை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

பலன்கள் :

காலையில் உணவு எதுவும் சாப்பிடாமல் ஸ்ரீராம நவமி விரதம் இருந்து ஸ்ரீராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும். அதனால் குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள்.

ஸ்ரீராமஜெயம் என்ற எழுத்தை 108 முறை, 1008 முறை எழுத தொடங்கலாம். ஸ்ரீராம என்ற நாமத்தை மூன்று முறை அடுத்தடுத்தவாறு உச்சரிக்க வேண்டும். இந்த பேராற்றல் வாய்ந்த மந்திரத்தால் ஆணவம் அழியும். மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் விளையும்.

ஸ்ரீராம நாமம் ஜெபிப்பதும், ராம நாமத்தை பிறர் சொல்லக்கேட்பதும், ஸ்ரீராமபிரானுடைய திருநாமத்தை எழுவதும் மிகுந்த புண்ணியத்தைக் கொடுக்கும், ராமாயணம் படிக்க இயலாதவர்கள், ஸ்ரீராம.... ஸ்ரீராம என்று சொன்னாலே ராமாயணம் படித்த புண்ணியம் கிடைக்கும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

rama navami


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->