தினம் ஒரு திருத்தலம்... 7 இசைத்தூண்கள்... 64 திருவிளையாடல்கள்... ஐஸ்வர்யங்களை தரும் தலம்...!! 
                                    
                                    
                                   meenakshi amman temple in madurai
 
                                 
                               
                                
                                      
                                            அருள்மிகு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் :
அமைவிடம் :
இத்தலம் வைகை ஆற்றின் கரையில், கோயில் நகரமான மதுரையின் மத்தியில் அமைந்துள்ள சிவன் ஆலயமாகும். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர். 
மாவட்டம் :
மீனாட்சி அம்மன் திருக்கோயில், மதுரை மாவட்டம்.
எப்படி செல்வது?
தமிழ்நாட்டின் எல்லா முக்கிய நகரங்களில் இருந்தும் மதுரைக்கு ரயில் மற்றும் சாலை போக்குவரத்து வசதிகள் உண்டு.
கோயில் சிறப்பு :
பொதுவாக எல்லா கோயில்களிலும் ஒன்று அல்லது நான்கு வாசல்கள் இருக்கும். ஆனால், இத்தலத்தில் ஐந்து வாசல்கள் உள்ளன. அதாவது கிழக்கு பகுதியில் சுவாமி சன்னதிக்கு ஒரு வாசலும், அம்மன் சன்னதிக்கு ஒரு வாசலும் உள்ளன. இத்தகைய அமைப்பு வேறெங்கும் இல்லை.
மீனாட்சியம்மன் கோயிலின் வடக்கு ஆடி வீதியில், கல்லில் இசை வெளியிடும் 5 இசைத் தூண்கள், ஆயிரங்கால் மண்டபத்தில் 2 இசைத் தூண்கள் ஆக மொத்தம் 7 இசைத் தூண்கள் உள்ளன.
ஈசனின் 64 திருவிளையாடல்களும் மதுரையிலேயே நடந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.
உலக அதிசயங்களைத் தேர்வு செய்வதற்காக ஒரு இணையதளம் செய்த முயற்சியில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலும் ஒன்றாக இடம் பெற்றிருந்தது. 
பொற்றாமரைக் குளத்தில் மீன் போன்ற உயிரினங்கள் காணப்படுவதில்லை என்பது ஓர் அதிசயம்.
கோயில் திருவிழா :
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா, முடிசூட்டுவிழா, திக்விஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம், புட்டுத் திருவிழா ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்தக் கோயிலில் தமிழ் மாதம் ஒவ்வொன்றிலும் சிறப்பு விழாக்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
வேண்டுதல் :
இங்குள்ள மீனாட்சியம்மனை வணங்கினால் சகல ஐஸ்வர்யங்களுடன் கூடிய வாழ்க்கை அமையும். கல்யாண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவை அம்பாளை வேண்டினால் அமைகிறது. வேண்டும் வரமெல்லாம் தரும் அன்னையாக மீனாட்சி இருப்பதால் இத்தலத்தில் பக்தர்கள் தங்கள் எல்லாவிதமான வேண்டுதல்களையும் அம்பாளிடம் வைக்கின்றனர்.
நேர்த்திக்கடன் :
சுவாமிக்கு பால், எண்ணெய், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யலாம். விரதம் இருத்தல், தானதருமம் செய்தல், வேள்வி புரிதல், தவம் செய்தல், தியானம் செய்தல் ஆகியவை இத்தலத்தில் செய்தால் பன்மடங்கு புண்ணியம் கிடைக்கும்.
கோயில் பிரசாதம் :
இத்தலத்தில் தரப்படுகின்ற தாழம்பூ குங்கும பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலைப் போல லட்டு பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
                                     
                                 
                   
                       English Summary
                       meenakshi amman temple in madurai