தீபாவளியின் உண்மையான வரலாறு இது தான்...!
தீபாவளியின் உண்மையான வரலாறு இது தான்...!
மனிதர்களாகப் பிறந்தவர்கள் மகான்களாகப் போற்றப் படுவதற்கு, அவர்களின் தன்னலமற்ற உன்னத செயல்கள் தான் காரணம்.
இன்று நாடு முழுவதும், தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாட பரபரப்பாக தயாராகிக் கொண்டிருக்கிறோம். இப்போதைய தீபாவளியின் பரிமாணம் காலத்திற்கேற்ப மாறுதல் உடையது. இந்த தீபாவளி தோன்றியதன் உண்மையான வரலாறு எத்தனை பேருக்குத் தெரியும்?
கி.பி-5-ஆம் நுாற்றாண்டில் வாழ்ந்தவர், வர்த்தமான மஹாவீரா். இந்தியாவில் உள்ள பீஹார் மாநிலத்தில் பிறந்தவர். அரச வம்சத்தில் பிறந்த இவர், சத்ரியராக இருந்தவர். பின், சமண மதத்தின் பால் கொண்ட ஈர்ப்பினால், சமணத் துறவியானார்.
24 சமணத் தீர்த்தங்கரர்களில், இவர் தான் 24-வது தீர்த்தங்கரர். இவர் சமணத் துறவியான பிறகு, இவரது புகழ் நாடெங்கும் பரவியது. நாடெங்கிலும் தனது பிரசங்கத்தினால், மக்களைக் கவர்ந்தவர்.
இறுதியாக, பீஹார் மாநிலத்தில் உள்ள “பவபுரி” என்ற இடத்தில், அந்தப் பகுதியை ஆண்ட மன்னரின் வேண்டுகோளுக்கிணங்க, அரண்மனை மைதானத்தில், ஆயிரக் கணக்கான மக்கள் சூழ்ந்திருக்க, நடு நாயகமாக பீடத்தில் அமர்ந்து, ஆன்மீக உரையாற்றிக் கொண்டிருந்தார். மன்னர் குடும்பம் உட்பட அனைவரும், மெய் மறந்து, மஹாவீரரின், சொற்பொழிவைக் காதாறக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
கிழக்கு வெளுக்கத் துவங்கிய நேரத்தில் தான், அவர் தன் உரையை முடித்தார். அவர் பேச்சைக் கேட்ட நினைவுடனே, மக்களும், கலைந்து சென்றனர். மன்னர் அந்த மகானிடம் ஆசி வாங்கி, விடை பெற அவர் அருகில் வந்தார்.
சுவாமி! என்றழைத்தார். அர்த்தபரியங்காசனத்தில் நிஷ்டையில் அமர்ந்திருந்த மஹாவீரரிடத்தில் எந்ந சலனமும் இல்லை. மன்னர் திரும்பத் திரும்ப அழைத்தும், அவரிடம் எந்த அசைவும் தென்படவில்லை. பயபக்தியுடன், மஹாவீரரின் உடலைத் தொட்ட போது, அவரது உடல் சில்லிட்டிருந்தது.
சொற்பொழிவாற்றிய நிலையிலேயே, அவரது உயிர் பிரிந்திருந்தது. இதைக் கண்ட மன்னர், மோட்சத்துக்கான வழி காட்டியாக சொற்பொழிவாற்றி விட்டு, உயிர் பிரிந்த, மஹாவீரர் இறந்து, ஜோதியாக இறைவனுடன் கலந்து விட்டார். அதனால், அனைவரும், தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுங்கள், என்று உத்தரவிட்டார்.
மக்களும், மன்னர் குடும்பத்தினரும், அன்று தங்கள் வீட்டு வாயில்களில் விளக்கேற்றினர். அந்த தீபஒளித் திருநாள் தான், பின்னாளில் மருவி தீபாவளி ஆனது. இது தான், தீபாவளி பண்டிகை தோன்றியதன் உண்மையான வரலாறு!
மதுரை ராஜா -
English Summary
original history of Diwali festival