இது படுகொலையல்ல! கொடூரமான சித்திரவதைக் கொலை! மக்களின் கதியோ, அதோ கதி!  - Seithipunal
Seithipunal


அய்யோ பாவம் ஜனநாயகம். கர்நாடகத்தில் ஆளுங்கட்சியிடமும், எதிர்க்கட்சியுடமும் சிக்கிக் கொண்டு அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இது ஒரு ஜனநாயகப் படுகொலை என்று நினைத்து, ஒரு நாள் அஞ்சலியுடன் முடித்து விடலாம் என்று பார்த்தால் அதற்கும் வாய்ப்பில்லை. ஜனநாயத்தை சரமாரியாக வெட்டி, அது உயிரிழக்கப் போகும் நேரத்தில் மீண்டும் காப்பாற்றி, உடல்நலம் தேறக்கூடிய நிலையில் மீண்டும் வெட்டிப் போட்டால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் கர்நாடகத்தில் ஆட்சியைக் கைப்பற்ற பாரதிய ஜனதா கட்சியும், ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள காங்கிரசும் நடத்தும் நாடகங்கள் இருக்கின்றன.

கர்நாடகத்தில் கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 225 இடங்களில் 113 இடங்களைக் கைப்பற்றும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும். ஆனால், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாரதிய ஜனதாவுக்கு மொத்தம் 105 இடங்கள் கிடைத்தன. காங்கிரசுக்கு79 இடங்களும், மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு 38 இடங்களும் கிடைத்தன. 2 இடங்களில் சுயேட்சைகளும், ஓரிடத்தில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரும் வென்றனர்.

பாரதிய ஜனதாவுக்கு போதிய ஆதரவு கிடைக்காத நிலையில் காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதாதளமும் இணைந்து ஆட்சியமைத்தன. சுயேட்சைகளும், பகுஜன் சமாஜமும் கூட ஆட்சியில் அங்கம் வகித்தன. இது வழக்கமான நடைமுறை தான். இதற்கு முன் மணிப்பூர், கோவா மாநிலங்களில் பாரதிய ஜனதா கூட இப்படித்தான் ஆட்சியைப் பிடித்தது.

ஆனாலும், கர்நாடகத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்றும் கூட ஆட்சியமைக்க முடியாததை பாரதிய ஜனதா கட்சி ஜனநாயகப் படுகொலையாகவே பார்த்தது. எப்படியாவது காங்கிரஸ் & மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியை கவிழ்த்து விட்டு ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் 8 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அத்தனை உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவது பிரச்சினையல்ல. ஆனால், அவ்வாறு ஆதரவை வாங்கினாலும், ஆதரவு அளித்தவர்களின் எண்ணிக்கை அவர்கள் கட்சி உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு இல்லாவிட்டால் கட்சித் தாவல் சட்டப்படி அவர்களின் பதவி பறிக்கப்பட்டு விடும். அதனால் பாரதிய ஜனதாவின் கனவு நனவாகாமல் போய்விடும்.

அதற்காகத் தான் அற்புதமாக ஒரு திட்டம் தீட்டியது. பாரதிய ஜனதாவின் செல்வாக்கை பெரும்பான்மை அளவுக்கு உயர்த்துவதற்கு பதிலாக, சட்டப்பேரவையின் பெரும்பான்மையை பாரதிய ஜனதாவுக்கு பொருந்தும் அளவுக்கு குறைப்பது தான் அந்த திட்டமாகும். அதன்படி தான் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 15 உறுப்பினர்களை பதவி விலக வைத்தது. அவர்களின் பதவி விலகல் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால், அந்த நாளிலேயே குமாரசாமி அரசு பெரும்பான்மை இழந்து கவிழ்ந்து இருக்கும்.

அதை காங்கிரசும், ஜனதாதளமும் அனுமதிக்குமா? அவர்கள் மட்டும் ஜனநாயகத்தின் பாதுகாவலர்களா?

பாரதிய ஜனதா எந்த ஆயுதத்தைப் பயன்படுத்தி 15 உறுப்பினர்களை பதவி விலக வைத்ததோ, அதே ஆயுதத்தைப் பயன்படுத்தி அவர்களை இழுக்க முயன்றது. அதில் ஓரளவு வெற்றியும் பெற்றது. ஒரே ஒரு சட்டப்பேரவை உறுப்பினரை தமது பக்கம் இழுத்து வந்தது. அதைக் காட்டியே மற்ற உறுப்பினர்களையும் இழுக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த காங்கிரஸ் அணிக்கு அடுத்த அடி விழுந்தது. எந்த உறுப்பினரை காங்கிரஸ் கட்சி அரும்பாடுபட்டு இழுத்ததோ, அதே உறுப்பினரை பாரதிய ஜனதா மீண்டும் பிடித்துச் சென்று விட்டது. அதுமட்டுமின்றி, காங்கிரஸ் அணியில் அமைச்சர்களாக இருந்த இரு சுயேட்சைகளையும் பாரதிய ஜனதா தங்கள் பக்கம் இழுத்து விட்டது.

கடைசி அத்தியாயமாக காங்கிரஸ் அணி நம்பியது வானளாவிய அதிகாரத்தை. அது தாங்க சபாநாயகரைத் தான் சொல்கிறேன். காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமை ஏற்றுக் கொள்ள அவர் மறுத்து விட்டார். ராஜினாமை அவர் ஏற்காதவரை குமாரசாமி அரசுக்கு பெரும்பான்மை நீடிக்கும் என்பதால் அரசு கவிழாது என்பது அவர்களின் நம்பிக்கை. இது கிட்டத்தட்ட பிரேக் பிடிக்காத லாரியின் முன்னால் எலுமிச்சை பழத்தை கட்டி விட்டு, அது அனைத்தையும் காப்பாற்றும் என்று நம்புவதற்கு சமமானது தான்.

இதனால் அதிர்ச்சியடைந்த 15 உறுப்பினர்களும் தங்களின் பதவி விலகலை ஏற்க வேண்டும் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கமாக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை காப்பாற்றிக் கொள்ள உச்சநீதிமன்றத்திற்கு செல்வார்கள். ஆனால், இந்திய ஜனநாயகத்தில் முதன் முறையாக தங்களின் பதவியை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி உச்சநீதிமன்றம் சென்றவர்கள் இந்த 15 பேர் தான். ஆஹா.... ஜனநாயகத்தின் மீது எவ்வளவு அக்கறை பாருங்கள்.

இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றம் ஓர் உத்தரவு பிறப்பித்தது பாருங்கள்.... அது தான் நட்ட நடுநிலையான தீர்ப்பு ஆகும். 15 சட்டப்பேரவை உறுப்பினர்களின் கோரிக்கை என்னவென்றால், தங்களின் பதவி விலகலை ஏற்றுக் கொள்ள சபாநாயகருக்கு ஆணையிட வேண்டும் என்பது தான். கர்நாடக ஆளும் கூட்டணியின் கோரிக்கை என்னவென்றால், 15 சட்டப்பேரவை உறுப்பினர்களும் கட்சியின் கொறடா உத்தரவுக்கு கட்டுப்பட்டவர்கள் என்று அறிவிக்க வேண்டும் என்பது தான்.

ஆனால், உச்சநீதிமன்றமோ, மிகவும் நடுநிலையாக இருப்பதாக நினைத்துக் கொண்டு இரு தரப்பு கோரிக்கைகளையும் நிராகரித்து விட்டது. இந்த ஒரு குழப்பம் போதாதா? காங்கிரஸ் கூட்டணிக்கு. உச்சநீதிமன்றத் தீர்ப்பு தெளிவாக இல்லை... அதனால் விளக்கம் கேட்கப் போகிறோம். அதுவரைக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று கூறிவிட்டது. அதனால் சட்டப்பேரவை ஒத்திவைக்கப் பட்டு விட்டது. அதன் பயனாக குமாரசாமி அரசு வெண்டிலேட்டர் போட்ட நோயாளியாக பிழைத்துக் கொண்டிருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் ஜனநாயகமும் இப்போது அதே நிலையில் இருக்கிறது.

குமாரசாமி அரசும், ஜனநாயகமும் தப்பித்து விடும் என்று நினைத்து விட வேண்டாம். உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் என்ன தீர்ப்பு வழங்கினாலும் சரி தான்.... இரு தரப்பும் சும்மா இருக்காது. மத்தியிலும் அதிகாரத்தில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி இப்போதுள்ள அரசை கவிழ்க்க முயற்சிக்கும். கர்நாடக அரசு அதன் பெரும்பான்மையை இத்தனை மணி நேரத்திற்குள் நிரூபிக்க வேண்டும் என்று அம்மாநில ஆளுனர் 3 முறை கெடு விதித்ததே இதற்கு சாட்சியாகும். காங்கிரஸ் கூட்டணியும் எப்பாடுபட்டாவது, இழந்த உறுப்பினர்களை விலைக்கு வாங்கியாவது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பாடுபடும்.

இந்த ஆடு புலி ஆட்டம் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும். அதற்கு பிறகு கடைசியில் என்ன நடக்கும்? ஜனநாயகம் படுகுழியில் தள்ளி புதைக்கப்படும்!

(பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் முகநூல் பதிவில் இருந்து.. )


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bjp and Congress Play with democracy in Karnataka


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->