லஞ்சம் வாங்கினால் தப்பிக்க முடியாது...கடலூரில் நேரடி ஆய்வின் போது ஊழியரை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்த அமைச்சர்...!
You cant get away taking bribe minister abruptly dismissed employee during live inspection Cuddalore
கடலூர் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் பி.வெங்கடரமணன் மேற்கொண்ட திடீர் ஆய்வின்போது, விவசாயிகளிடம் லஞ்சம் வசூலிக்கப்பட்டதாக எழுந்த புகார் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அரசு ஊழியரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் பி.வெங்கடரமணன், கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு நவீன அரிசி ஆலை, நகராட்சி அமுதம் பல்பொருள் அங்காடி, சேத்தியாத்தோப்பில் செயல்படும் எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்கு மற்றும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை நேரில் பார்வையிட்டு விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

அதன் ஒரு பகுதியாக, வடலூர் அருகே மருவாய் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்குச் சென்ற அமைச்சர், அங்கு நெல் விற்பனைக்காக காத்திருந்த விவசாயிகளுடன் நேரடியாக கலந்துரையாடி, கொள்முதல் நடைமுறைகள் குறித்து கேட்டறிந்தார்.அப்போது, நெல் கொள்முதல் செய்வதற்காக மூட்டைக்கு ரூ.50 முதல் ரூ.60 வரை லஞ்சம் பெறப்படுவதாக விவசாயிகள் அமைச்சரிடம் நேரடியாக புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை உடனடியாக உறுதி செய்ய முடிவு செய்த அமைச்சர், அங்கிருந்த நெல் வருகைப் பதிவேடுகளை ஆய்வு செய்தார்.பின்னர், பதிவேட்டில் இடம்பெற்றிருந்த ஒரு விவசாயியின் கைப்பேசி எண்ணை எடுத்து நேரடியாக தொடர்புகொண்டு பேசினார். அந்த விவசாயியும், நெல் மூட்டைக்கு ரூ.50 முதல் ரூ.60 வரை கட்டாயமாக பணம் கேட்கப்படுவதாக அமைச்சரிடம் உறுதிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
புகார் உண்மை என்பது உறுதியானதும், சம்பந்தப்பட்ட நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றி வந்த அரசு ஊழியர் வேல்முருகனை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு அமைச்சர் பி.வெங்கடரமணன் பரிந்துரை செய்தார்.
இதனுடன், மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என்றும், விவசாயிகளிடம் லஞ்சம் பெற்றது உறுதியான எந்த ஊழியராக இருந்தாலும், அவர்கள் மீது தயக்கமின்றி பணியிடை நீக்கம் உள்ளிட்ட கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியருக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
மேலும், அரசு சேவைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை உறுதிப்படுத்தும் வகையில், விவசாயிகளிடம் முறைகேடாக பணம் வசூலிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது எந்தவித சமரசமும் இன்றி கடுமையான நடவடிக்கை தொடரும் என்றும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.
English Summary
You cant get away taking bribe minister abruptly dismissed employee during live inspection Cuddalore