பஹல்காம் தாக்குதலின் போது கணவர்களை இழந்த பெண்கள் தீவிரவாதிகளிடம் கைகூப்பி கெஞ்சினர்; அவர்களிடம் வீரமும், ஆவேசமும் இல்லை: பாஜக எம்பியின் சர்ச்சை பேச்சு..!
Women lost their husbands during the Pahalgam attack pleaded with the terrorists BJP MPs controversial speech
கடந்த மாதம் 22-ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின் போது கணவர்களை இழந்த பெண்கள் தீவிரவாதிகளிடம் கைகூப்பி கெஞ்சினர் என்று பாஜக எம்பி கூறியமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலத்தை சேர்ந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராம் சந்தர் ஜாங்ரா, இவர் பிவானியில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் பேசுகையில், ‘பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் தங்களது கணவர்களை இழந்த பெண்கள், வீராங்கனைகளைப் போல தீவிரவாதிகளை எதிர்த்து போராடியிருக்க வேண்டும். அவர்களிடம் வீரமும், ஆவேசமும், தீவிர உணர்வும் இல்லை. அதனால் தீவிரவாதிகளிடம் கைகூப்பி கெஞ்சி, துப்பாக்கிக் குண்டுக்கு இலக்காகினர்’ என்று கூறினார்.

இவரது இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை அவமதிப்பதாகவும், அவர்களை கோழைகளை போன்று சித்தரிப்பதாகவும் எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு பாஜக எம்பியின் கருத்து குறித்து காங்கிரஸ் எம்.பி தீபேந்தர் சிங் ஹூடா கூறுகையில், ‘பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் கணவர்களை இழந்த பெண்களின் கண்ணியத்தை பாஜக எம்.பி. ராம் சந்தர் ஜாங்ரா பறித்துவிட்டார்’ என்று பதிவிட்டுள்ளார். அத்துடன், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்ட பதிவில், ‘பாஜக எம்பியின் அருவருப்பான இந்த கருத்துக்கு ‘கண்டனம்’ என்ற வார்த்தையால் கூட பதிலளித்தால் சரியாக இருக்காது. பெண்களை மதிக்காமல், அவர்களை அவமானப்படுத்துவதே பாஜக-வின் உண்மையான முகமாக இருந்து வருகிறது’ என்று கூறியுள்ளார்.
English Summary
Women lost their husbands during the Pahalgam attack pleaded with the terrorists BJP MPs controversial speech