மூடப்படாத வடிகால் பள்ளத்தில் பெண் பலி...!-தி.மு.க. அரசை கடுமையாக குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி
Woman dies uncovered drainage ditch Edappadi Palaniswami severely accuses dmk
சென்னையில் அரும்பாக்கம் வீரபாண்டி நகர் முதல் தெருவில் இருக்கும் மூடப்படாத மழைநீர் வடிகால் பள்ளத்தில், மர்மமாக பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சூளைமேடு காவலர்கள் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் கயிறு கட்டி சடலத்தை மீட்டனர். அதன் பிறகு,சடலம் கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

இந்த விசாரணையில், உயிரிழந்தவர் கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 42 வயதான 'தீபா' என்பது தெரியவந்தது. மேலும், மூடப்படாமல் அலட்சியமாக திறந்து இருந்த வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்ததில், தலை பகுதியில் மோசமான காயம் ஏற்பட்டதுடன், தண்ணீரில் மூழ்கியும் உயிரிழந்திருக்கலாம் என காவலர்கள் சந்தேகிக்கின்றனர்.
மேலும், பிரேத பரிசோதனை அறிக்கையிலும், நள்ளிரவு 12.30 மணியளவில் பள்ளத்தில் விழுந்த தீபா, அரை மணி நேரம் உயிர் பிழைக்கப் போராடிய பிறகு உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தி.மு.க. அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் 'எடப்பாடி கே.பழனிசாமி'.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டதாவது,"சென்னை சூளைமேடு பகுதியில் மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து, தீபா என்ற பெண் உயிரிழந்தது மனதை பதைபதைக்கச் செய்கிறது. பல மாதங்களாக அந்த வடிகால் பள்ளத்தை மூட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தும், அரசு கவனிக்காமல் இருந்ததே இந்த உயிர்பலி நடக்கக் காரணம்.
பிரேத பரிசோதனை அறிக்கையில், அரை மணி நேரம் உயிர் போராடியதாக வரும் தகவல்கள் மேலும் மனதை உலுக்குகின்றன. ஆண்டுதோறும் இப்படியான உயிரிழப்புகள் நிகழ்வதை மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். ‘95%, 97% வேலை முடிந்துவிட்டது’ என்று எண்கள் விளையாடிய தமிழக அமைச்சர்களும், சென்னை மேயரும் இப்போது என்ன பதில் சொல்வார்கள்? மழைநீர் வடிகால் பணிகளும் முடியவில்லை, மழைநீரும் வடிகவில்லை, அப்பாவி உயிர்களைக் காப்பாற்ற வல்லமையுமில்லை .
இப்படியான ஸ்டாலின் மாடல் தி.மு.க. ஆட்சி மக்களுக்கு எந்த பயன்?” என்று பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அதே சமயம், தீபா உயிரிழப்புக்கு தமிழக அரசு முழுமையான பொறுப்பேற்று, உடனடியாக அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என்றும், இனி வரும் காலங்களில் மழைநீர் வடிகால் பணிகள் பாதுகாப்பு நெறிமுறைகளோடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
English Summary
Woman dies uncovered drainage ditch Edappadi Palaniswami severely accuses dmk