2027-இல் 07 மாநிலங்களுக்கு தேர்தல்; மத்திய அமைச்சரவை அதிரடி மாற்றம்; இளம் அமைச்சர்களுக்கு வாய்ப்பு..?
With elections scheduled in seven states in 2027 a major reshuffle in the Union Cabinet
பிரதமர் மோடி தலைமையிலான 3.0 அரசு கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் 10-ஆம் தேதி பதவியேற்றது. இதன் தொடர்ச்சியாக, வரும் 21-ஆம் தேதி மத்திய அமைச்சரவை கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அமைச்சகங்கள் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் மற்றும் சட்ட மாற்றங்கள் குறித்த செயல்திறன் தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்யப்படவுள்ளன.
ஈரான் போர் காரணமாக மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் நிலவுகிறது. இதன் காரணமாக எரிசக்தி பாதுகாப்பு மற்றும் எரிபொருள் சிக்கனம் குறித்தும் அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி ஆலோசனைகளை வழங்கவுள்ளார்.
இந்நிலையில், தற்போது அமைச்சரவையில் 72 அமைச்சர்கள் உள்ள நிலையில், அரசியலமைப்பு சட்டப்படி 81 பேர் வரை இடம்பெறலாம் என்பதால் காலியிடங்களை நிரப்பவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மாற்றமானது வரும் ஜூன் 10-ஆம் தேதிக்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தாண்டில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் என 05 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்தன. இதில் மேற்குவங்கத்தில் பாஜக முதல்முறையாகஆட்சியை கைப்பற்றியது. அதேப்போன்று, புதுச்சேரி, அசாமில் பாஜக கூட்டணி ஆட்சியை தக்கவைத்துள்ளது.
இந்நிலையில், இந்த மாநிலங்களை பிரதிநிதிப்படுத்தும் வகையில், அம்மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, வரும் 2027-ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய 07 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

இந்த 07 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல்களை கருத்தில் கொண்டு, 50 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் மத்திய அமைச்சரவையில் அதிக பிரதிநிதித்துவம் அளிக்க முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக 65 முதல் 70 வயதுடைய மூத்த அமைச்சர்கள் கட்சிப் பணிகளுக்கு மாற்றப்பட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
அத்துடன், இந்தாண்டு தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற்றப்பட்டால், அமைச்சர்களின் எண்ணிக்கை 122 ஆக உயர வாய்ப்புள்ளது. கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற புதிய பாஜக தேசிய தலைவரின் கீழ் கட்சி மற்றும் ஆட்சியை ஒருங்கிணைக்க இந்த அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
English Summary
With elections scheduled in seven states in 2027 a major reshuffle in the Union Cabinet