சீனியர்களை கழற்றிவிடும் தமிழக பாஜக? புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க பாஜக திட்டம்! காரணம் என்ன தெரியுமா?
Will the Tamil Nadu BJP remove seniors BJP plans to give more opportunities to newcomers Do you know the reason
வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், பாஜக சார்பில் சீனியர் தலைவர்களுக்கு பதிலாக அதிகமான புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்காக பாஜக தரப்பில் 60 தொகுதிகள் வரை கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதிமுக 30 தொகுதிகளுக்குள் மட்டுமே வழங்க முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், தொகுதி பங்கீடு தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு இதுகுறித்து தெளிவான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், வரும் தேர்தலில் பாஜகவின் வேட்பாளர் தேர்வு எப்படி இருக்கும் என்பது குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தலில் போட்டியிட சீட் பெற பல சீனியர் தலைவர்கள் மற்றும் இளம் நிர்வாகிகள் கட்சியில் முயற்சித்து வருகின்றனர். அதிமுக கூட்டணியில் இருப்பதும், தமிழகத்தில் கட்சி வளர்ச்சி அடைந்திருப்பதும் காரணமாக பலரும் களமிறங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆனால் இந்த முறை சீனியர் தலைவர்களை விட அதிகமான புதுமுகங்களை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்குப் பின்னால் சில முக்கிய காரணங்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலாவது, தமிழகத்தில் பாஜக வளர்ச்சியை விரிவுபடுத்த இளம் தலைமுறையை முன்னிறுத்த வேண்டும் என்ற கணக்கில் கட்சி மேலிடம் செயல்படுகிறது. புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிப்பதன் மூலம் எதிர்காலத்தில் கட்சியின் வளர்ச்சி உறுதியாகும் என்று பாஜக நம்புகிறது. அதேபோல் திமுக அரசுக்கு எதிரான அதிருப்தி மற்றும் அதிமுக கூட்டணியின் ஆதரவு ஆகியவற்றை பயன்படுத்தி இந்த தேர்தலில் இரட்டை இலக்க எம்எல்ஏக்களை வெற்றி பெறச் செய்யலாம் என கட்சி கணக்கிடுகிறது.
இரண்டாவது காரணமாக, பாஜகவில் பல சீனியர் தலைவர்கள் ஏற்கனவே பல முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். அதே சமயம் திமுகவில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தில் விஜய் போன்ற இளம் தலைவர்கள் முன்னிலையில் இருப்பதால், பாஜகவும் இளைஞர்களை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற கருத்து கட்சிக்குள் நிலவுகிறது. இதன் காரணமாக இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கும் திட்டம் பரிசீலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் மகளிர் வாக்காளர்களிடையே கட்சியின் ஆதரவை அதிகரிக்க முடியும் என்று பாஜக மேலிடம் கருதுகிறது.
மேலும், கடந்த 2021 சட்டசபை தேர்தலில் புதுமுகங்கள் பெற்ற வாக்கு சதவீதமும் இந்த முடிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. அப்போது முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, சிகே சரஸ்வதி, நடிகை குஷ்பு, போஜராஜன் உள்ளிட்ட பலர் புதுமுகங்களாக களமிறக்கப்பட்டனர். இதில் பலர் அதிக அளவில் வாக்குகளை பெற்றனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை 38 சதவீத வாக்குகள் பெற்றார். மொடக்குறிச்சி தொகுதியில் சிகே சரஸ்வதி 42 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஊட்டி தொகுதியில் போஜராஜன் 42 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். அதேபோல் ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்பு 39,405 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றார்.
இதனால் புதுமுகங்களை களமிறக்கினாலும் தமிழகத்தில் பாஜக நல்ல அளவில் வாக்குகளை பெறும் என்ற நம்பிக்கையில் இந்த தேர்தலிலும் அதே யுக்தியை கட்சி பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Will the Tamil Nadu BJP remove seniors BJP plans to give more opportunities to newcomers Do you know the reason