தவெகவில் இணையப்போகிறாரா முன்னாள் ஐஏஎஸ் சகாயம்?விஜய் தரப் போகும் வெகுமதி! திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி?
Will former IAS officer Sahayam join Tvk Vijay reward Contest in Trichy East byelection
தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தவெக சார்பில் அவர் போட்டியிடலாம் என்றும், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான பட்டியலிலும் அவரது பெயர் இடம்பெற்றுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக களமிறங்கிய நடிகர் விஜய் தலைமையிலான தவெக, 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழக அரசியலில் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது. முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, கட்சியின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த விஜய், பெரம்பூர் தொகுதியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், மயிலம் தொகுதியில் வெற்றி பெற்றதால் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை சி.வி. சண்முகம் ராஜினாமா செய்துள்ளார். இதனால் அந்த இடத்திற்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த சூழலில், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தவெக சார்பில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை நிறுத்துவது குறித்து ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேர்மையான அதிகாரி என்ற பெயரை பெற்றிருந்த சகாயம், கடந்த சில ஆண்டுகளாக சமூக மற்றும் அரசியல் கருத்துக்களால் தொடர்ந்து கவனம் ஈர்த்தவர். குறிப்பாக, முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழாவில் அவர் பங்கேற்றது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியது.இதையடுத்து, சகாயம் தவெகவில் இணையலாம் என்ற தகவல்கள் தொடர்ந்து பரவி வருகின்றன.
இதற்கிடையில், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான பட்டியலிலும் சகாயத்தின் பெயர் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. நிர்வாக அனுபவம், தூய்மையான இமேஜ் மற்றும் தேசிய அளவில் பேசக்கூடிய திறன் ஆகிய காரணங்களால், அவரை டெல்லியில் தவெகவின் முகமாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் விஜய்க்கு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரத்தில், அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ள மூத்த அரசியல்வாதி கு.ப. கிருஷ்ணனின் பெயரும் மாநிலங்களவை பதவிக்காக பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மூன்று முறை எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவம் அவருக்கு இருப்பதால், அனுபவமிக்க அரசியல்வாதியை தேர்வு செய்யலாமா அல்லது புதிய முகமான சகாயத்துக்கு வாய்ப்பு அளிக்கலாமா என்ற விவாதம் தவெக வட்டாரங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ள காங்கிரஸ் கட்சியும் மாநிலங்களவை இடம் கேட்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், மாநிலங்களவையில் தவெகவின் முதல் பிரதிநிதியாக கட்சியைச் சேர்ந்த ஒருவரையே அனுப்ப வேண்டும் என்ற மனநிலையில் முதல்வர் விஜய் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால், சகாயம் உண்மையிலேயே தவெகவில் இணையப்போகிறாரா? அவருக்கு திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் வாய்ப்பு கிடைக்குமா? அல்லது மாநிலங்களவை பதவி வழங்கப்படுமா? என்ற கேள்விகள் தற்போது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
English Summary
Will former IAS officer Sahayam join Tvk Vijay reward Contest in Trichy East byelection