"சோபா" வந்தது ஏன்? சோபாவில் கோடிக்கணக்கான பணம்!தரங்கெட்ட அரசியல்! இப்படியும் கிண்டல் பண்ணுவீங்களா? திருமாவளவன் குமுறல்!
Why did Sofa come Crores of money in the sofa Bad politics Are you still making fun of me like this Thirumavalavan is angry
முதல்வர் விஜய்க்காக விசிக அலுவலகத்தில் சிறப்பு சோபா ஏற்பாடு செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விசிக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் விளக்கப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவற்றின் ஆதரவுடன் விஜய் ஆட்சியமைத்தார். இதையடுத்து, முதல்வராக பதவியேற்ற விஜய் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்தித்தார்.
அப்போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், “புது சோஃபா போகுது… அதன்பின்னாடியே புது முதல்வர் போகிறார்” என்று விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்த விசிக தலைவர் திருமாவளவன், “விசிக அலுவலகத்திற்கான சோபா ஏற்கெனவே ஆர்டர் செய்யப்பட்டதுதான். அது விஜய்க்காக வாங்கப்படவில்லை” என்று விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருவதால், விசிக தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:“விசிக அம்பேத்கர் திடல் அலுவலகத்தில் நீண்ட நாட்களாக பராமரிப்பு பணிகள் நடைபெற்றன. அவை முடிந்த நிலையில் அலுவலக பயன்பாட்டிற்காக புதிய சோபாக்கள் வாங்கப்பட்டன. ஆனால் அதையே சமூக வலைதளங்களில் கிண்டல் செய்வது முட்டாள்தனமானது.”
மேலும்,“தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தலைவர் திருமாவளவனை சந்திக்க வருகிறார் என்ற தகவல் பரவிய நேரத்தில் சோபாக்கள் வந்ததால், அதை விஜய்க்காகவே வாங்கியதாக சிலர் விமர்சித்தனர். இது தரங்கெட்ட அரசியல்” என்று விசிக குற்றம்சாட்டியுள்ளது.
அதேபோல்,“ஒரு கட்சியின் அலுவலகத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவது அவர்களின் நிர்வாக விஷயம். அதை கூட அரசியல் உள்நோக்கத்துடன் பேசுவது அரசியல் நாகரிகம் அல்ல” என்றும் கூறப்பட்டுள்ளது.
விசிக தனது பதிவில் மேலும் கடுமையாக,“கோடிக்கணக்கில் சொத்துக்களும் ஆடம்பர பங்களாக்களும் வைத்திருப்பவர்களை கேள்வி கேட்காத சமூகம், எளியவர்கள் ஒரு சோபா வாங்கினாலும், ஷூ போட்டாலும் அரசியலாக்குவது வேடிக்கையாக உள்ளது” என தெரிவித்துள்ளது.
இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
English Summary
Why did Sofa come Crores of money in the sofa Bad politics Are you still making fun of me like this Thirumavalavan is angry