தவெகவுடன் யார் யார் கைகோர்ப்பார்கள்? “ஐன.23க்கு அப்புறம் நடக்கப்போறத பாருங்க”.. மோடி வரும் நாளா? ‘சஸ்பென்ஸ்’ வைத்த செங்கோட்டையன்!
Who will join hands with Tvk Look what will happen after Ain 23 Is it the day Modi will come Sengottaiyan who created suspense
தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு, வியூக ஆலோசனைகள் என அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் (தவெக), நாம் தமிழர் கட்சி என நான்கு முனை அரசியல் போட்டி உருவாகும் என அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.
இந்தச் சூழலில், ஜனவரி 23 ஆம் தேதிக்கு பிறகு எந்தெந்த கட்சிகள் தவெகவுடன் கைகோர்க்கின்றன என்பது தெளிவாகத் தெரிந்துவிடும் என்று தவெக உயர்மட்டத் தலைமை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தெரிவித்துள்ளது, அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் ஜனவரி 23 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர உள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) கட்சிகளின் தலைவர்கள் மேடையேற்றப்பட உள்ளதாகவும், கூட்டணியின் முழு வடிவம் அன்றைய நாளில் வெளிப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்தப் பின்னணியில், அதே நாளைக் குறிப்பிட்டு செங்கோட்டையன் பேசியிருப்பது பல்வேறு அரசியல் ஊகங்களை கிளப்பியுள்ளது.
தவெக உயர்மட்ட ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,“தமிழ்நாடு மட்டுமல்ல, கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநில மக்களும், விஜய்யைப் போல ஒரு தலைவர் தங்கள் மாநிலத்துக்கு இல்லையே என ஏங்குகிறார்கள். ஒரு திரைப்படத்திற்கு 250 கோடி ரூபாய் ஊதியம் பெறும் நிலையில், நான்கு படங்களில் நடித்தால் 1000 கோடி ரூபாய் சம்பாதிக்க முடியும். ஆனால் அந்தப் பெரும் பணத்தைத் துறந்து, மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அரசியலுக்கு வந்த தலைவர் விஜய் தான்” என்று புகழாரம் சூட்டினார்.
மேலும் அவர்,“பொருளாதார அறிவும், நிர்வாகத் திறனும் கொண்டவர் விஜய். அவர் அளிக்கும் தேர்தல் வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார். எங்கள் கட்சியில் வேட்பாளர்களைத் தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. படித்த இளைஞர்கள் அதிக அளவில் தவெகவில் இணைந்து வருகின்றனர்” எனக் கூறினார்.
பாஜக குறித்து பேசிய செங்கோட்டையன், தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைய வாய்ப்பில்லை என்றும், அவர்களின் விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை என்றும் தெரிவித்தார். கூட்டணி விவகாரத்தில் அவர் கூறிய,“ஜனவரி 23-ஆம் தேதிக்குப் பிறகு தவெகவுடன் எந்தெந்தக் கட்சிகள் கைகோர்க்கின்றன என்பது தெரிந்துவிடும்” என்ற கருத்து தான் தற்போது அரசியல் வட்டாரங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி பங்கேற்கும் என்.டி.ஏ பொதுக்கூட்டம், அதிமுக–பாஜக கூட்டணி வடிவம் மற்றும் தவெக எடுத்துக்கொள்ளும் அரசியல் நிலைப்பாடு ஆகியவை ஒன்றாக இணைந்து, ஜனவரி 23க்குப் பிறகான தமிழக அரசியலை முற்றிலும் புதிய திருப்புமுனைக்கு கொண்டு செல்லும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
English Summary
Who will join hands with Tvk Look what will happen after Ain 23 Is it the day Modi will come Sengottaiyan who created suspense