'அதிகாரமே இல்லாத படை இருந்து என்ன பயன்'...? - சிறப்பு படைக்கு எதிராக கனிமொழி எழுப்பிய அதிரடி கேள்வி....!
What use having force without any power Kanimozhi provocative question against Special Forces
தூத்துக்குடி ஆனந்த்நகர் பகுதியில் உள்ள தேவாலயத்தில் 12 வயது சிறுமி ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாக திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு உடனடி உதவியை உறுதி செய்ய வேண்டிய அரசு, செயல்திறன் குறித்த கேள்விகளை எழுப்பும் வகையில் புதிய திட்டங்களை மட்டும் விளம்பரப்படுத்தி வருவதாக விமர்சித்துள்ளார்.

மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் 'சிறப்பு படை'க்கு பொதுமக்கள் நேரடியாக தொடர்புகொள்ளும் தனிப்பட்ட உதவி எண் கூட இல்லாதது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமூகநலத் துறையின் கீழ் ஏற்கனவே பெண்களுக்கான பாதுகாப்பு உதவி எண்ணாக 181 செயல்பட்டு வருவதையும், குழந்தைகளுக்கான தேசிய உதவி எண்ணாக 1098 நீண்ட காலமாக பயன்பாட்டில் இருப்பதையும் குறிப்பிட்டுள்ள அவர், இவ்விரு சேவைகள் நடைமுறையில் உள்ள சூழலில், மக்கள் வரிப்பணத்தை செலவழித்து தனியாக ஒரு 'சிறப்பு படை'யை உருவாக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், எந்தவிதமான தனிச்சிறப்பு அதிகாரங்களும் வழங்கப்படாத ஒரு அமைப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதையும் அரசு விளக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு விவகாரத்தில் வெறும் அறிவிப்புகளோ விளம்பரங்களோ போதாது; நடைமுறைச் செயல்பாடுகளே முக்கியம் என்பதையும் தனது அறிக்கையின் மூலம் கனிமொழி வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
What use having force without any power Kanimozhi provocative question against Special Forces