”கொறடா” என்றால் என்ன?அமைச்சருக்கு இணையான கெத்து!கொறடா பதவி ஏன் இவ்வளவு முக்கியம்?அதிகாரங்கள், கடமைகள் என்ன? - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசில், விருகம்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ சபரிநாதன் அரசு கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார். சட்டசபை நடவடிக்கைகளில் மிக முக்கிய பங்கு வகிக்கும் இந்த பதவி தற்போது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

சட்டசபைக்குள் ஆளும் கட்சியின் கட்டுப்பாடு மற்றும் ஒற்றுமையை உறுதி செய்யும் முக்கிய பொறுப்பே அரசு கொறடாவுக்கு வழங்கப்படுகிறது. குறிப்பாக நம்பிக்கை வாக்கெடுப்பு, முக்கிய சட்ட மசோதாக்கள் மற்றும் தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்புகளில் அனைத்து எம்.எல்.ஏக்களும் அவையில் இருக்க வேண்டும் என்பதையும், கட்சியின் முடிவுப்படி வாக்களிக்க வேண்டும் என்பதையும் உறுதி செய்வது கொறடாவின் முதன்மை பணியாகும்.

இந்திய அரசியலில் “கொறடா” என்ற பதவி, இங்கிலாந்து நாடாளுமன்ற நடைமுறையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆளும் கட்சிகள் மட்டுமின்றி எதிர்க்கட்சிகளும் தங்களுக்கு தனித்தனி கொறடாக்களை நியமித்து வருகின்றன.

ஒரு கட்சியின் எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் எவ்வாறு செயல்பட வேண்டும், எந்த விவகாரத்தில் எப்படிப் பேச வேண்டும், எப்போது அவையில் இருக்க வேண்டும் போன்ற வழிகாட்டுதல்களை கொறடா வழங்குவார். கட்சிக்கும் உறுப்பினர்களுக்கும் இடையே பாலமாக செயல்படுபவரும் கொறடாதான்.

கொறடா உத்தரவை மீறி ஒரு எம்.எல்.ஏ செயல்பட்டால், கட்சி தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படலாம். குறிப்பாக கட்சியின் முடிவுக்கு எதிராக வாக்களித்தாலோ அல்லது முக்கிய வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இருந்தாலோ, சம்பந்தப்பட்ட உறுப்பினரை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் பரிந்துரை செய்யும் அதிகாரமும் கொறடாவுக்கு உள்ளது.

அதே நேரத்தில், குடியரசுத் தலைவர் தேர்தல் போன்ற சில குறிப்பிட்ட வாக்கெடுப்புகளில் மட்டும் கொறடா உத்தரவு கட்டாயமில்லை. அப்போது உறுப்பினர்கள் தங்கள் விருப்பப்படி வாக்களிக்கலாம்.

அரசு கொறடாவுக்கு மாநில அமைச்சருக்கு இணையான சில சலுகைகளும் வழங்கப்படுகின்றன. அரசு வாகனம், அலுவலக வசதி, அதிகாரப்பூர்வ உதவியாளர்கள் உள்ளிட்ட பல நிர்வாக வசதிகள் இவருக்கு உண்டு.

இதனால் தான் அரசியலில் “கொறடா” பதவி மிகவும் சக்திவாய்ந்த மற்றும் முக்கியமான பொறுப்பாக பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

What is a whip A whip equivalent to a minister Why is the position of whip so important What are the powers and duties


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->