எல்லாரும் சீட் வேணும்ன்னா எப்படி? சீனியர்களுக்கு சீட் கிடையாதா?ஸ்டாலின் பிரம்மாஸ்திரம்! மீண்டும் வருகிறது சட்ட மேலவை?
What if everyone wants a seat Wonot seniors get a seat Stalin Brahmastra Is the Legislative Council coming back
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு மற்றும் தொகுதி அடையாளம் காணும் பணிகளில் திமுக தலைமை தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், கட்சியின் சீனியர் தலைவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் தொடர்பான வியூகங்களை வடிவமைக்கும் வகையில் ஓய்வு பெற்ற திமுக ஆதரவு ஐஏஎஸ் அதிகாரிகள், பணியில் உள்ள உயரதிகாரிகள், கட்சியுடன் நெருக்கம் கொண்ட அறிவுஜீவிகள் மற்றும் தேர்தல் வியூக அமைப்பான ‘பென்’ நிறுவனத்தின் தலைவர் சபரீசன் உள்ளிட்டோருடன் ஸ்டாலின் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அந்த ஆலோசனைகளில், “இந்த முறை சில சீனியர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்காமல், அவர்களை கட்சி பணிக்காக பயன்படுத்தலாம்; தேர்தல் முடிந்த பிறகு அவர்களின் அரசியல் பங்கினை தனியாக பரிசீலிக்கலாம்” என்ற கருத்து முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில தொகுதிகளில் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீது உள்ள அதிருப்தி குறித்து உளவுத்துறை மற்றும் தேர்தல் சர்வே அறிக்கைகள் சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது. அரசு மற்றும் முதல்வர் மீது பொதுவாக எதிர்மறை கருத்து இல்லையெனினும், சில உள்ளூர் பிரதிநிதிகள் மீது மக்கள் அதிருப்தி வெளிப்படுத்தியதாக அந்த அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளன என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில், சில முக்கிய சீனியர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்காமல் இருக்கலாம் என்ற தகவல் கட்சிக்குள் பரவி வருகிறது. அதேசமயம், இத்தகைய முடிவு எடுக்கப்பட்டால் அவர்களின் எதிர்வினை எவ்வாறு இருக்கும், அதை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்தும் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
மேலும், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் சட்ட மேலவை (Legislative Council) அமைப்பை கொண்டு வருவது குறித்தும் திமுக தலைமையில் பரிசீலனை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டப்பேரவையில் வாய்ப்பு வழங்கப்படாத சீனியர்களை சட்ட மேலவைக்கு கொண்டு வரலாம் என்ற யோசனையும் பேசப்படுவதாக கூறப்படுகிறது.
இத்தகைய அரசியல் மாற்றங்கள் கட்சிக்குள் தலைமுறை மாற்றத்திற்கான முன்னோட்டமா, அல்லது தேர்தல் வெற்றிக்கான கணக்குப் போட்டியா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இறுதி முடிவு எப்போது வெளியாகும் என்பதே தற்போது திமுக வட்டாரங்களில் எதிர்பார்ப்பாக உள்ளது.
English Summary
What if everyone wants a seat Wonot seniors get a seat Stalin Brahmastra Is the Legislative Council coming back