'நாங்க இருக்கோம்'...அறிவாலயத்தில் ஒலித்த சபதம்...! - தொண்டர்களின் எழுச்சியைக் கண்டு பூரித்துப்போன மு.க.ஸ்டாலின்...!
We here vow that rang out Arivalayam Mk Stalin overjoyed see rise volunteers
தி.மு.க. தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு, கட்சித் தொண்டர்களிடையே புதிய உற்சாகத்தையும் நம்பிக்கையையும் உருவாக்கியுள்ளது. சவால்கள் எவ்வளவு கடினமாக இருந்தாலும் உறுதியும் ஒற்றுமையும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்ற வலுவான செய்தியை அவர் பதிவு மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் தனது பதிவில், “சோதனைகள் நமக்கு புதிதல்ல. நெருப்பாறுகளைக் கூட துணிச்சலுடன் கடந்து செல்லும் மனவலிமை நமக்குள்ளது” என்ற நம்பிக்கைமிக்க கருத்தை உணர்வுபூர்வமாக பகிர்ந்துள்ளார்.

மேலும், கழகத்தின் தலைமையகமான அறிவாலயத்திற்கு தினமும் ஏராளமானோர் வந்து தங்களின் ஆதரவை வெளிப்படுத்தி வருவதாகவும், அவர்கள் கூறும் “நாங்கள் இருக்கிறோம்... நாம் மீண்டும் வருவோம்” என்ற வார்த்தைகள் எந்த எதிர்ப்பையும் முறியடிக்கும் சக்தியை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாளும் காலை அறிவாலயத்தில் நேரில் சந்தித்து கருத்துகளை கேட்பதும், மாலை முதல் இரவு வரை உடன்பிறப்புகள் பதிவு செய்யும் கருத்துகளை முழுமையாக படித்து ஆராய்வதும் தனது அன்றாட வழக்கமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உடன்பிறப்புகளின் எண்ணங்கள் மற்றும் ஆலோசனைகளை அடிப்படையாகக் கொண்டு, கழகத்தின் மறுசீரமைப்பு மற்றும் மறுகட்டமைப்பு பணிகளை தீவிரமாக முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக இளமையின் துடிப்பும் அனுபவத்தின் ஆழமும் இணைந்த “மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு” அமைக்கப்பட்டுள்ளதாகவும், கிளை முதல் தலைமை வரை கழக வளர்ச்சிக்கான முக்கிய பரிந்துரைகளை வழங்க அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உடன்பிறப்புகளின் உணர்வுகளையும் எதிர்கால பார்வையையும் உள்வாங்கி, கழகத்தின் அடுத்த நூறாண்டு பயணத்திற்கான வலுவான அடித்தளத்தை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இருவார அயலகப் பயணத்திற்காக இன்று புறப்படுவதாகவும், உடலால் வெளிநாட்டில் இருந்தாலும் தனது மனம் எப்போதும் அறிவாலயத்துடனும் உடன்பிறப்புகளுடனும் இணைந்தே இருக்கும் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
English Summary
We here vow that rang out Arivalayam Mk Stalin overjoyed see rise volunteers