ஸ்டாலினையே தோற்கடிச்சு டம்மியாக இருக்கும் விஎஸ் பாபு!மாவட்ட செயலாளர் பதவி கோரும் எம்.எல்.ஏ-க்கள்?விஜய்க்கு தலைவலி!
VS Babu who defeated Stalin himself has been sidelined MLAs seeking the District Secretary post A headache for Vijay
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், கட்சிக்குள் பதவி எதிர்பார்ப்பு மற்றும் அதிருப்தி குரல்கள் எழத் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த தவெக, தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது. விஜய் தலைமையிலான அரசில் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றுக்கும் அமைச்சரவை பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது.
இதனால், தவெக சார்பில் வெற்றி பெற்ற பல எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சரவை வாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டது. தற்போது அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்களைத் தவிர, பல எம்.எல்.ஏ-க்கள் எந்த நிர்வாகப் பொறுப்பும் இன்றி இருப்பதால், கட்சியின் முக்கியப் பொறுப்புகளை எதிர்பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, தேர்தலில் முக்கிய தலைவர்களை வீழ்த்தி வெற்றி பெற்ற சில எம்.எல்.ஏ-க்கள், தங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கட்சித் தலைமையிடம் முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதில், கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை தோற்கடித்து வெற்றி பெற்ற வி.எஸ். பாபுவுக்கு அமைச்சரவை வாய்ப்பு கிடைக்காதது அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டது. அவரது ஆதரவாளர்கள் ஏமாற்றம் தெரிவித்த நிலையில், தற்போது அவருக்கு கட்சியின் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும், சுமார் 10 எம்.எல்.ஏ-க்கள் மாவட்ட செயலாளர் பதவியை எதிர்பார்த்து வருவதாகவும், அதற்கான கோரிக்கையை கட்சித் தலைமையிடம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் வெற்றிக்கு தாங்கள் முக்கிய பங்காற்றியதாகவும், தங்களது மாவட்டங்களில் கட்சியை வளர்த்ததில் பெரும் பங்களிப்பு செய்துள்ளதாகவும் அவர்கள் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மாவட்ட அமைப்புகளை மறுசீரமைக்கும் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையாததால், அவசர முடிவுகள் எதுவும் எடுக்கப்படாது என்று கட்சித் தரப்பில் கூறப்படுகிறது.
ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் மாதத்திலேயே பதவி எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பது விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு புதிய சவாலாகக் கருதப்படுகிறது. எனினும், இது பெரிய அளவிலான கிளர்ச்சியாக மாறவில்லை என்றும், ஆளும் கட்சிகளில் இயல்பாக ஏற்படும் பதவி எதிர்பார்ப்பின் வெளிப்பாடாகவே கட்சித் தலைமை இதைப் பார்க்கிறது என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
VS Babu who defeated Stalin himself has been sidelined MLAs seeking the District Secretary post A headache for Vijay