வாக்காளர் கணக்கெடுப்பு தீவிரம்...! -தேர்தல் கமிஷன் நேரடி ஆய்வில் கோவை...!
Voter census intensifies Election Commission conducts live survey Coimbatore
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் முழுமைப்படுத்தும் பணிகள் தேர்தல் ஆணையத்தின் தலைமையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நவம்பர் 4ஆம் தேதி தொடங்கிய இந்த சிறப்பு திருத்தப்பணி, மாநிலம் முழுவதும் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்படுகிறது.
இதற்காக, தேர்தல் ஆணையம் வழங்கிய சிறப்பு கணக்கெடுப்பு படிவங்கள் அடிப்படையில், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பொறுப்பான அலுவலர்கள் வீடு-வீடாக சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து விண்ணப்பப் படிவங்களை வழங்கி வருகின்றனர். புதிய வாக்காளர்கள் சேர்த்தல், பழைய பதிவுகள் திருத்தம் மற்றும் நீக்க வேண்டிய பட்டியல்களை உறுதிசெய்வது உள்ளிட்ட பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன.

இந்நிலையில், மத்திய தேர்தல் துணைக் கமிஷனர் கே.கே. திவாரி மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில், கோவை மண்டலத்துக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்கும் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் இன்று மாலை கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
அதற்கு முன்பாக, தேர்தல் ஆணையத்தின் குழு கோவை மாவட்டத்தில் நேரடியாக களஆய்வு மேற்கொண்டு, வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை ஆய்வு செய்கின்றனர். பின்னர், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள், அவற்றில் உள்ள சவால்கள், குறைகள் மற்றும் மேம்படுத்தல் வழிகள் குறித்து விரிவாக பேசப்பட உள்ளது.
இந்தக் கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் துல்லியம் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவது, புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதில் சரியான ஆவண சரிபார்ப்பு மேற்கொள்வது, மற்றும் பழைய அல்லது தவறான பதிவுகளை நீக்குவது போன்ற முக்கிய வழிகாட்டுதல்களை தேர்தல் அதிகாரிகள் வழங்க உள்ளனர்.
மேலும், கடந்த 3 நாட்களாக மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் இந்த திருத்தப்பணிகளில், அதிகாரிகள் மற்றும் தரை மட்ட பணியாளர்கள் எவ்வாறு ஈடுபட்டு வருகின்றனர், அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன என்பதையும் மையம் ஆராய உள்ளது. மாவட்ட கலெக்டர்கள் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் இதுவரை செய்த பணிகளின் நிலவர அறிக்கைகளை வழங்கி, தேவையான தீர்வுகளைப் பற்றியும் விவாதிக்க உள்ளனர்.
English Summary
Voter census intensifies Election Commission conducts live survey Coimbatore