தனிப்பெரும் மெஜாரிட்டியை நூலிழையில் தவறவிட்ட விஜய்!மெஜாரிட்டியை தடுத்த 10 தொகுதிகள்..வெறும் 4,649 ஓட்டுகள்..! அதிர வைக்கும் தேர்தல் டேட்டா! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி, யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக). தனது முதல் தேர்தலிலேயே திராவிட கட்சிகளின் பல தசாப்த ஆதிக்கத்தை உடைத்து, தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது தவெக.

ஆனால், இந்த தேர்தல் முடிவுகளின் பின்னணியில் வெளியாகியுள்ள ஒரு தகவல் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெறும் 4,649 வாக்குகள் கூடுதலாக கிடைத்திருந்தால், விஜய் எந்த கூட்டணியின் ஆதரவும் இல்லாமல் தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் ஆட்சியை அமைத்திருப்பார் என்பது தேர்தல் கணக்குகள் மூலம் தெரியவந்துள்ளது.

234 இடங்களைக் கொண்ட தமிழக சட்டப்பேரவையில் ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவை. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றதால், மேலும் 10 தொகுதிகள் கிடைத்திருந்தால் விஜய் தனி ஆட்சியை அமைத்திருப்பார்.

அதிலும் ஆச்சரியம் என்னவென்றால், அந்த 10 தொகுதிகளிலும் தவெக மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.

மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தவறிய 10 தொகுதிகள்:

  • திருக்கோவிலூர் – 285 வாக்குகள்

  • குளித்தலை – 579 வாக்குகள்

  • பழனி – 693 வாக்குகள்

  • கோவில்பட்டி – 843 வாக்குகள்

  • விக்கிரவாண்டி – 910 வாக்குகள்

  • உதகமண்டலம் – 976 வாக்குகள்

  • பாபநாசம் – 1,065 வாக்குகள்

  • திண்டுக்கல் – 1,131 வாக்குகள்

  • கிள்ளியூர் – 1,311 வாக்குகள்

  • திருமயம் – 1,492 வாக்குகள்

இந்த 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கும் தவெக வேட்பாளர்களுக்கும் இடையிலான மொத்த வாக்கு வித்தியாசம் வெறும் 4,649 மட்டுமே.

இந்த வாக்குகள் தவெக பக்கம் திரும்பியிருந்தால், கட்சியின் பலம் 118 ஆக உயர்ந்து, கூட்டணி ஆதரவு இல்லாமலேயே விஜய் ஆட்சியை அமைத்திருப்பார்.

இந்த தொகுதிகளை திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், ஐயூஎம்எல் மற்றும் பாமக போன்ற கட்சிகள் கைப்பற்றியுள்ளன. இதில் சில கட்சிகள் தற்போது தவெக அரசுக்கு ஆதரவு அளித்து வருவது அரசியல் ரீதியாக சுவாரஸ்யமான அம்சமாக பார்க்கப்படுகிறது.

தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றாலும், முதல் தேர்தலிலேயே 108 இடங்களை வென்றிருப்பது தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. குறிப்பாக எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல், நேரடியாக மக்களிடம் சென்று இத்தகைய ஆதரவை பெற்றிருப்பது விஜய்யின் அரசியல் பயணத்திற்கு வலுவான அடித்தளமாக பார்க்கப்படுகிறது.

“வெறும் 4,649 ஓட்டுகள்” — இந்த எண்ணிக்கையே இன்று தமிழக அரசியலில் பெரிய விவாதமாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay narrowly missed out on a single majority 10 constituencies that prevented a majority just 4649 votes Shocking election data


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->