“விஜய் மாடல்” தேசிய அரசியலுக்கு குறி? மிஷன் நார்த் இந்தியா! – டிவிகே டிஜிட்டல் டீம் புதிய அரசியல் நிறுவனம் தொடங்க திட்டம்!
Vijay Model a sign for national politics Mission North India TVK Digital Team plans to start a new political organization
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (டிவிகே) பெற்ற வெற்றி, இந்திய அரசியல் வட்டாரங்களையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் 108 இடங்களை கைப்பற்றி, தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்றது, அரசியல் நிபுணர்களிடையே பெரிய விவாதமாக மாறியுள்ளது.
இந்த நிலையில், தேர்தலில் விஜய்க்காக பின்னணியில் செயல்பட்ட டிஜிட்டல் வியூக நிபுணர்கள், தற்போது தேசிய அரசியலுக்கே செல்லும் வகையில் புதிய திட்டங்களை தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தலில் பயன்படுத்தப்பட்ட டிஜிட்டல் பிரச்சார உத்திகளை அடிப்படையாகக் கொண்டு, பிரசாந்த் கிஷோரின் ‘ஐ-பேக்’ (I-PAC) நிறுவனத்தைப் போல, ஒரு பெரிய அரசியல் ஆலோசனை நிறுவனத்தை உருவாக்க டிவிகே டிஜிட்டல் குழு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிறுவனம் மூலம் வட மாநிலங்கள் மற்றும் பிற மாநிலங்களில் போட்டியிடும் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு தேர்தல் வியூகங்கள், டிஜிட்டல் பிரச்சாரம், சமூக ஊடக மேலாண்மை போன்ற சேவைகள் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிவிகே தேர்தல் பிரச்சாரத்தின் மிகப்பெரிய பலமாக இருந்தது சமூக ஊடக பயன்பாடு. குறிப்பாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் யூடியூப் ஷார்ட்ஸ் மூலம் விஜய்யின் பேச்சுகள், அரசியல் கருத்துக்கள், ரசிகர் உணர்வுகள் அனைத்தும் மிக வேகமாக மக்களிடம் கொண்டு செல்லப்பட்டன.
இந்த குறும்பட வீடியோக்கள் இளைஞர்கள் மட்டுமின்றி, பள்ளி மாணவர்கள் வரை ஈர்த்ததாக கூறப்படுகிறது. அதன் மூலம் குடும்பத்தினரிடமும் விஜய்யைப் பற்றிய நேர்மையான பிம்பம் பரவியதாக அரசியல் விமர்சகர்கள் மதிப்பிடுகின்றனர்.
டிவிகே-வின் மற்றொரு முக்கிய உத்தியாக ‘பூத் லெவல் வாட்ஸ்அப் குழுக்கள்’ பார்க்கப்படுகின்றன. ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த குழுக்கள் மூலம், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு உடனடி பதில்கள் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
பெரிய அளவிலான பாரம்பரிய கட்சி அமைப்பு இல்லாத இடங்களிலும், இந்த டிஜிட்டல் வலையமைப்பே தேர்தல் பணிகளை முன்னெடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுவாக கடுமையான அரசியல் தாக்குதல்களையே மக்கள் எதிர்பார்க்கும் சூழலில், டிவிகே குழு “மாற்று அரசியல்” என்ற புதிய பிம்பத்தை உருவாக்க முயன்றது. வேலைவாய்ப்பு, ஊழல் ஒழிப்பு, போதைப்பொருள் தடுப்பு, லஞ்சமில்லா நிர்வாகம் போன்ற அன்றாட பிரச்சினைகளை மையமாக வைத்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
அதே நேரத்தில், கடந்த ஆட்சிகளின் மீது அதிருப்தியை உருவாக்கும் வகையிலும் சமூக ஊடகங்களில் நரேட்டிவ் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்பட்ட இந்த டிஜிட்டல் வியூகங்களை வட மாநிலங்களிலும் பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் டிவிகே டிஜிட்டல் குழு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தை குறிவைத்து புதிய அரசியல் பாணியை உருவாக்க முடியும் என அவர்கள் கருதுகின்றனர்.
ஒருகாலத்தில் வட இந்திய அரசியல் ஆலோசகர்கள் தமிழ்நாட்டிற்கு வந்த சூழல் இருந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டின் டிஜிட்டல் வியூக நிபுணர்கள் தேசிய அரசியலை நோக்கி நகர்வது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
English Summary
Vijay Model a sign for national politics Mission North India TVK Digital Team plans to start a new political organization